'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' எனும் மலையாள மொழி திரைப்படம் கேரளா மட்டுமல்லாது தமிழகத்திலும், பஞ்சாபிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது திரை துறை, கல்வி துறை மற்றும் பொதுமக்களிடம் நல்லவரவேற்ப்பை பெற்றுள்ளது.

வழக்கமாக ஒரு வகுப்பறையில் வரிசையாக அமைக்கப்பட்ட டேபிள்,பெஞ்சில் மாணவர்கள் அமரும் போது, கடைசி பெஞ்சில் அமரும் மாணவர்கள் கவனம் சிதற வாய்ப்புள்ளது.'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' திரைப்படத்தில் ப வடிவில் டேபிள் பெஞ்சுகள் சுவற்றை ஒட்டி அமைக்கப்படுவது போல காட்சிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் மாணவர்கள் அனைவரின் மேல் ஆசிரியரின் கவனம் விழும். மாணவர்களும் சமமாக ஆசிரியரை காண முடியும் என்பது போல அந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும். இந்த முறையினை கேரளாவில் சில பள்ளிகள் பின்பற்ற துவங்கி உள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் ப வடிவில் டேபிள் பெஞ்சுகள் அமைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் மாணவர்களுக்கு இருக்கக்கூடாது எனவும், இந்த வடிவில் அனைவரும் அமரும் போது மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் பள்ளி கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்முறை அனைத்து பள்ளிகளில் செய்ய சாத்தியம் உள்ளதா என்பது பற்றி விரைவில் தெரியவரும்.

கேரளாவில் இதுபோன்ற முயற்சிகள் நடைபெற்றபோது சமூக வலைத்தளங்களில் சிலர், ஒரு வகுப்பில் 60 பேருக்கு மேலே இருந்தால் எப்படி ப வடிவில் அமைக்கமுடியும் என கேள்வி எழுப்பியிருகின்றனர். அதற்கு இப்படத்தின் இயக்குனர் வினேஷ் விஸ்வநாதன், ஒரு வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் இருக்கவேண்டுமோ, அந்த வரம்பிற்கு ஏற்ப வகுப்பறைகள் இருக்கவேண்டும். ஒரே வகுப்பில் மிக அதிக மாணவர்களை அமரவைப்பது விதிமுறைகளுக்கு முரணானது என தனது கருத்தை வெளிப்படுத்தியதாக தகவல் உள்ளது.

இந்த திரைப்படத்தை கண்ட பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு பள்ளி முதல்வர், அப்பள்ளியில் இந்த முறையை கொண்டுவந்துள்ளார்.