அரசு துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கு அருகே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்வது போன்ற பல கோரிக்கைகளுக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி அலுவலர்கள் நேரடியாக மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்க உள்ளனர்.

கோவை மாநகரில் இந்த முகாம் வார்டு வார்டாக நடைபெற்றுவருகிறது. நாளை (30.8.25), உங்களுடன் ஸ்டாலின் முகாம், கோவை மாநகராட்சியில் வார்டு எண்-29- கணபதி பகுதியில் உள்ள பட்டியப்பா கவுண்டர் திருமண மண்டபத்தில் , (கட்டபொம்மன் தெரு) நடைபெறவுள்ளது.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் திட்டம் தமிழக அரசு சார்பில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த முகாம்களில் ரத்தப் பரிசோதனைகள், சர்க்கரை நோய், இருதய நோய் என எல்லாவிதமான பரிசோதனையும் அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக செய்து கொள்ள முடியும்.

இந்த முகாம் நாளை காலை 9 மணிக்கு  வடவள்ளி, மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சிறப்பு மருத்துவ முகாமில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மண்டலத் தலைவர்கள் , நிலைக்குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற  உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.