தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமாக 1914ல் கோவை டவுன் ஹால் பகுதியில் உருவாக்கப்பட்ட டிலைட் தியேட்டர் (வெரைட்டி ஹால் தியேட்டர்) வணிக வளாகமாக மாறவுள்ளது. இதற்காக அந்த தியேட்டர் கட்டிடம் இடிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவரால் வெரைட்டி ஹால் தியேட்டர் என 1914ல் உருவாக்கப்பட்ட இந்த திரையரங்கில் தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலக உச்சநட்சத்திரங்களின் படங்கள் திரையிட பட்டு வெற்றி விழா கண்டுள்ளது. 1950களில் வேறு ஒருவருக்கு இந்த திரையரங்கம் விற்கப்பட்டு டிலைட் தியேட்டர் என பெயர் மாற்றம் பெற்றது.
இந்த திரையரங்கம் தான் தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்கம். இந்த திரையரங்கு இருக்கும் பகுதியே வெரைட்டி ஹால் ரோடு என்ற அழைக்கப்படும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த திரையரங்கு நவீன வசதிகள் கொண்டு தரமுயர்த்தப்பட்டது. ஆனால் 2023 ஜூலைக்கு பின்னர் இங்கு திரையிடுவது நிறுத்தப்பட்டது. தற்போது இது வணீக வளாகமாக மாறவுள்ளதாகவும், இதற்காக இங்கு இடிக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.