நேற்று பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே வளாகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து ஆய்வு செய்ய NSG எனும் தேசிய பாதுகாப்பு குழு உள்ளூர் போலீசாருடன் இனைந்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம் கபே பகுதியில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பெங்களூர் முழுவதுமே பரபரப்பாகியுள்ளது. இந்த இடத்தில் நேற்றைய தினமே பாம் டிஸ்போசன்ஸ் ஸ்குவாட், தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் உள்ளூர் போலீஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றி இருந்தார்கள்.

இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு குழு என்று அழைக்கப்படும் NSG  குழுவினர் இன்று காலை சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அவர்களுடன் பாம் டிஸ்போசன்ஸ் ஸ்குவாட் அதிகாரிகளும் வந்திருந்தனர். இவர்களிடம் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கி இருக்கின்றது என தகவல்கள் கூறுகின்றன.

இந்த குண்டுவெடிப்பில் IED பயன்படுத்தப்பட்டிருப்பது நேற்றைய விசாரணையின் போது தெரியவந்தது. ஆனால் இன்று NSG வந்து விசாரணை செய்த பிறகு, இந்த வெடிகுண்டை வெடிக்க செய்ய டைமர் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

அந்த டைமர் உபகரணத்தை ஆய்வுக்காக பாம் டிஸ்போசல் மற்றும் NSG அதிகாரிகள் கைப்பற்றி இருக்கின்றனர். பொதுவாக இது போன்ற டைமர் டிவைசஸ்களை RDX வெடி பொருட்களை வெடிக்க பயன்படுத்துவார்கள் என்பது அவர்களுடைய கருத்தாக இருக்கிறது.

2022ல் கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் IED பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு முக்கியமாக செயல்பட்ட ஜமேஷா முபினுக்கு ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது.

இதே போல 2022 நவம்பர் மாதத்தில் மங்களூரில் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அதில் சம்பந்தப்பட்ட நபரும் ISIS அமைப்புடன் தொடர்புடையவராக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போதும் IED உபயோகிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடைபெற்று இருக்கக்கூடிய குண்டுவெடிப்பானது அதே மாதிரியான விஷயங்களை கொண்டிருப்பதால் தற்போது விசாரணை வளையம் விரிந்து இருக்கிறது. 

இந்த ராமேஸ்வரம் கஃபேவில் அண்மையில் நடைபெற்ற ராமர் கோவில் திறப்பு விழாவின் போது, சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனவே இதன் பின்னணியில் ஏதேனும் நடந்ததா என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உள்ளூர் போலீசார் சந்தேகத்தின் பெயரில் நேற்று இரவு ஒரு நபரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். சந்தேகப்படும் நபர் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் பகுதிகளுக்குள் எங்கெல்லாம் பயணத்தில் இருக்கிறார் என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 300 சிசிடிவி கேமராக்கள் பதிவு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஒரு நபரை தாண்டி வேறு யாராவது இருக்கிறார்களா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து அதற்கான பட்டியலை எடுத்து வருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்த தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மங்களூர், கோவை தொடர்புப்படுத்தும் விதமாக இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கிடைத்த ஆதாரங்கள் உள்ளன என்பதால் விசாரணை வேறு கட்டத்தை நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.