பைசன் 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவரும் ஐந்தாவது திரைப்படமான பைசன் வரும் 17ம் தேதி (வெள்ளி) திரைக்கு வருகிறது. நடிகர் விகாரமின் மகன் துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர் மற்றும் பலர் இதில் நடித்துள்ளார். தென் தமிழகத்தை கதை களமாகவும், கபடி, கட்டப்பஞ்சாயத்து மற்றும் எளிய மக்களின் வாழ்க்கை சவால்கள் போன்றவற்றை பேசும் படமாக இது இருக்கும்.

டீசல்

அறிமுக இயக்குனர் ஷண்முகம் முத்துசாமி எழுதி இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். வினய், கருணாஸ், அதுல்யா ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் தலைப்புக்கு ஏற்ப கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் கடத்தல் ஆகியவற்றை சுற்றிவரும் கதையில் கொஞ்சம் காதல், நிறைய சண்டைக்காட்சிகள், பில்ட் அப் வசனங்கள் இடம்பெறும் போல தெரிகிறது. 17ம் தேதி டீசலுக்கு மவுசு இருக்கிறதா என்பது தெரிந்துவிடும்.

ட்யூட்

மற்றுமொரு அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் உருவாக்கத்தில் தீபாவளிக்கு தில்லாக வெளிவரும் திரைப்படம் ட்யூட். இறுதி சுற்று, சூரரை போற்று படங்களை இயக்கிய சுதா கொங்காராவின் துணை இயக்குனர்களில் ஒருவரான கீர்த்தீஸ்வரன் கோமாளி, லவ் டுடே படத்தை இயக்கி பிரபலமான பிரதீப் ரங்கநாதன் எனும் இளம் டிராகனை ஹீரோவாகவும், இளம் நடிகை மமீதா பைஜூவை கதாநாயகியாகவும் வைத்து உருவாகியுள்ள நகைச்சுவை - காதல் திரைப்படம் இது.


இந்த ஆண்டு பெரிய நட்சத்திரங்கள் யாருக்குள்ளும் போட்டியில்லை. தக் லைஃப், கூலி, ரெட்ரோ, மதராஸி என எதிர்பார்ப்புகள் கொண்ட திரைப்படங்கள் பலவும் வந்து சென்று விட்டன. இந்த தீபாவளிக்கு இளம் நடிகர்கள், அறிமுகஇயக்குனர்கள் என புது தலைமுறை போட்டி போடவுள்ளன. 

மக்கள் ஆதரவு யாருக்கு கிடைக்கிறது என பார்க்கலாம். காந்தாரா எனும் பிரமாண்ட திரை சூறாவளி மவுசு குறையாமல் களத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.