கோவையில் அரசு பள்ளியில் பயின்ற கவுன்சிலர் ஒருவர் தான் பயின்ற அதே பள்ளியில் பயிலும் 1200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு தீபாவளி பரிசாக தனது சொந்த செலவில் பட்டாசு மற்றும் புத்தாடைகளை கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ்.இவர் அதே ஊரில் அரசு பள்ளியில் பயின்று தற்போது தாளியூர் பேரூராட்சியில் திமுக கவுன்சிலராக இருக்கிறார்.
தீபாவளியை முன்னிட்டு இந்தாண்டு தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள 1200க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் கவுன்சிலர் பொன்ராஜ் பட்டாசு கிப்ட்பாக்ஸ்,புத்தாடைகள் கொடுத்து அசத்தினார். இதனால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில் :-
அரசு பள்ளியில் நான் பயிலும் போது உடுத்துவதற்கு சரியான உடை என்பது இல்லை. அப்போது உதவி செய்வதற்கும் யாரும் இல்லை.அதே போல தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதற்கு வசதி இல்லை. இம்மாதிரியான கஷ்டத்தை தற்போது உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அனுபவிக்க கூடாது என்பதற்காக தான் அறக்கட்டளையை துவங்கி சேவைகளை செய்து வருகிறேன். அடுத்த வருடம் 3,000 மாணவர்களுக்கு பட்டாசுகள் வழங்குவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
1200+ பேருக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய கோவை கவுன்சிலர்! யார் இவர்?
- by CC Web Desk
- Oct 28,2024