தீபாவளி கொண்டாட்டத்தில் 'மாசு' காட்டிய கோவை
- by admin
- Oct 22,2025
கோவையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பெரும்பாலும் விற்பனை நல்ல அளவில் இருந்துள்ளது. கடைகளில் 85% பட்டாசுகள் விற்பனை ஏற்பட்டுள்ளது என கோவை மாவட்ட பட்டாசு விற்பனையாளர் நலச்சங்க தலைவர் சின்னுசாமி கூறியுள்ளார்.
தீபாவளி அன்று காற்றின் தரம் மாநகரின் பல இடங்களில் குறைந்துள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரம் ஒலி மாசு அதிகரித்துள்ளது. காற்றின் தரத்தை கண்காணிக்க நிறுவப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் மூலம் ஆராய்ந்ததில், கோவை கலெக்டர் அலுவலகம் அருகே காற்றின் தர மதிப்பு 160 AQI எனவும் கவுண்டம்பாளையம் அருகே 147 AQI எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
AQI 100- 200க்குள் இருந்தால் காற்றின் தரம் சுவாசிக்க சிறந்து என்பதற்கும், மோசம் என்ற அளவிற்கும் நடுவே உள்ளது என கூறப்படுகிறது.
பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருநது. காலை 6 மணி முதல் 7 மணி எனவும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை எனவும் அறிவிக்கப்பட்டது. இதை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை விதிமீறலில் ஈடுபட்டதாக 36 பேர் மேல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தீபாவளிக்கு மறுநாள் வழக்கமான 1100 டன் குப்பையுடன் 300-500 டன் கூடுதலாக சேர்ந்துள்ளது கோவை மாநகரில். தீபாவளிக்கு மறுநாள் 65% தூய்மை பணியாளர்கள் திரும்ப வந்ததால் இந்த குப்பைகளை முற்றிலுமாக அகற்ற மாநகராட்சிக்கு சற்று சிக்கல் ஏற்பட்டது.
தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி அன்று மாவட்டத்தில் ரூ.33.7 கோடிக்கு டாஸ்மாக் மது கடைகளில் விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் தகவல் உள்ளது.