கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஏழூர் பிரிவு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றால் தான் பேருந்துகளில் ஏறி செல்ல முடியும்.

நேற்று கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி இந்த சாலை வழியே வந்துகொண்டிருந்த கார் ஒன்று சாலையை கடந்து கொண்டிருந்த மாணவ, மாணவிகள் மேல் மோதியிருக்கிறது. இதனால் 14-16 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களை அருகே இருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

காரை ஓட்டி வந்தது 19 வயதான நந்த கிஷோர் எனும் நபர் என்பதும், அவர் ஓட்டி வந்த கார் பிரேக் பிடிக்காமல் மாணவர்கள் மேல் மோதியதாகவும் கூறப்படுகிறது. அவர் மேல் கிணத்துக்கடவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவம் கோவையில் இனி நடைபெறாமல் இருக்கும் வகையில், பள்ளிகளில் இருந்து  மாணவர்கள் சாலைகளை கடக்கும் இடங்கள் அருகே கட்டாயம் "ஸ்கூல் ஜோன்", "ஜீப்ரா கிராஸிங்", "வெள்ளை கோடுகள் இடப்பட்ட முறையான அளவில், முன்னறிவிப்புடன் கூடிய வேகத்தடை" ஆகியவை போன்ற பல நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகங்கள் கோவை போலீசாருடன் இணைந்து முன்னெடுக்கவேண்டும் என்பது பெற்றோர்கள் ஏராளமானோரின் எதிர்பார்ப்பு.