கோவை உக்கடம் பகுதியில் இளைஞரை தாக்கிய போலீஸ் விஷயத்தில் வெளியான அண்மை தகவல்
- by David
- Jul 11,2025
கோவை, கோட்டைமேடு பகுதியில் இரவில் காரில் சென்ற இளைஞரை உக்கடம் காவல் நிலைய போலீசார் காரில் இருந்து இறக்கி கடுமையாக தாக்கும் காட்சி இன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோட்டைமேடு பகுதியில் காரில் சென்ற இளைஞரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காரில் இருந்து இழுத்து இறக்கி அவரை கடுமையாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த இளைஞர் யார்? எதற்காக காவலர்கள் தாக்குகின்றனர்? என்பது குறித்த விவரங்கள் முதலில் சரிவர வெளியாகாமல் இருந்தது.
'சவுத் பர்ஸ்ட்' செய்தி தளத்தில் வெளியான தகவல்கள் மூலம் , இந்த சம்பவம் ஜூன் 25ம் தேதி உக்கடம் வின்செட் சாலையில் நடைபெற்றுள்ளதாகவும், சொகுசு காரில் வந்த1 நபர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் வாகனத்தை நிறுத்தியபோது, கீழே இறங்க மறுத்ததாகவும் தெரியவருகிறது.
காரில் இருந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததாகவும், அவரை கீழே இறக்க காருக்குள் கான்ஸ்டபில் உள்ளே சென்றபோது வாகனத்தை அவர் இயக்க முயன்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை காவலர்கள் லத்தியை கொண்டும் கன்னத்தில் ஓங்கி அறைந்தும் தாக்கியது வீடியோவில் பதிவாகி உள்ளது.
அதே சமயம் இந்த சம்பவம் பற்றி ஒரு இளைஞர் பேசும் வீடியோ வெளிவந்துள்ளது. அதில் தனது பெயர் அபு தாயீர் எனவும் தான் தான் 24ம் தேதி அந்த சம்பவத்தில் இருந்த இளைஞர் எனவும், போலீசார் சோதனை செய்த போது தான் வாகனத்தை நிறுத்தியதாகவும், தனது வாகனத்திற்குள் போலீசார் வந்தபோது பதட்டத்தில் காரை இயக்கி விட்டதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும் அவர், தனக்கும் போலீசாருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை எனவும் எல்லாம் சமாதானமாகி விட்டதாகவும் கூறுகிறார். மூன்றாம் நபர் யாரோ வீடியோ எடுத்துவிட்டதாகவும் கூறுகிறார்.
இருந்தாலும் இளைஞரை காவலர்கள் கடுமையாக கையாண்ட விதம் சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறியுள்ளது.