ஒரு வங்கியில் கணக்கு வைத்தால், ஊதியம் தொடர்பான கணக்குகளிலும் 'ஸிரோ பேலன்ஸ்' கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்கவேண்டிய தேவை இல்லை.

அதே சமயம் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், அவர்களின் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை முறையாக பராமரிக்காவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும்.

குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காததால் பொதுத்துறை வங்கிகளால் 2020 நிதியாண்டு துவங்கி 2024 நிதியாண்டு வரை மட்டும் வசூலித்த தொகை மட்டும் சுமார் ரூ.8500 கோடி. எனவே பொது துறை வங்கிகளில் கணக்குகளை வைத்திருந்தாலும் அதில் பெரிய அளவுக்கு பணத்தை டெபசிட் விட நல்ல சலுகைகள் வழங்கும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்து அதில் மக்கள் டெபசிட் செய்துவருவதாக பேச்சுகள் உள்ளது.

இந்த நிலையில் தான் கனரா பேங்க் , பேங்க் ஆப் பரோடா, இந்தியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவை தங்களின் பல்வேறு வகையான சேமிப்பு கணக்குகளில் பெரும்பான்மையானவற்றில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை கைவிட்டுள்ளன.

மேலும் சில வங்கிகள் இதை செய்ய ஆலோசித்து வருகின்றன. இதற்கு பதில் ஏ.டி.எம்/ டெபிட் கார்டுகளில் அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைக்கு மேல் செய்தால் கூடுதல் கட்டணம் வசூல் செய்யலாம் என ஆலோசித்து வருவதாக தெரிகிறது. எது எப்படியோ, இந்த குறைந்தபட்ச பேலன்ஸ் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைத்தால் போதும் என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

2020 முதலே வழக்கமான சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காவிட்டால் அபராதம் வசூலிப்பதில்லை என எஸ்.பி.ஐ. முடிவு செய்து அதை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.