தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமான நிலையங்களில் செய்தியாளர்களிடம் பலமுறை பேட்டி கொடுத்துள்ளார். பலமுறை கோவை விமான நிலையத்துக்கு அவர் வருகை தரும்போது செய்தியாளர்களுடன் சுவாரசியமாக, இயல்பாக, சில நேரங்களில் காரசாரமாக உரையாடுவார், பரபரப்பான கருத்துக்களை தெரிவிப்பார், பிறர் கூறிய கருத்துக்களுக்கும் பதில் தருவார்.

இன்று மதியம் 2:50 மணி அளவில் டில்லியில் இருந்து கோவை திரும்பிய அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் சிலர் பேட்டிக்காக அணுகிய போது, இனி அவர் தன் வாழ்நாள் முழுவதும் விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்கெடுக்கப்போவதில்லை என்று அறிவித்தார்.

அவர் மட்டும்மல்லாது, கட்சியில் (தமிழக பாஜக) யாருமே இனி விமான நிலையத்தில்/பொது இடங்களில் செய்தியாளர்களை சந்திக்கபோவது இல்லை எனவும், இது பற்றி ஒரு தனி உத்தரவு விரைவில் கட்சி சார்பில் வெளியாகும் எனவும், செய்தியாளர் சந்திப்பு இனி கட்சி அலுவலகத்தில் மட்டுமே நடைபெறும், நிகழ்வு நடைபெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னரே கட்சியின் சம்மந்தப்பட்ட மாவட்ட தலைவர் மூலம் முறையாக தகவல் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.