2025 ஜூன் மாதத்தில் வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட் ஊழியர்களுக்கான உறைவிட வளாகம் பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த 4-வயது சிறுமியை சிறுத்தைப்புலி ஒன்று தாக்கியதில் அந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இதுபோன்ற மற்றொரு சம்பவம் அங்கு நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை  வனச்சரகத்திற்கு உட்பட்ட வேவர்லி எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த அசாம் மாநில புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவரின் 8 வயது மகனை வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்த கரடி தாக்கியுள்ளது.இதில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

வேவர்லி எஸ்டேட் பகுதியில் பணிசெய்யும்  அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஜோர்பத் அலி ரங்கமாலா. இவரின் மகன் மகன் நூர்ஜில் ஹக் (8). சம்பவம் நடைபெற்ற தினத்தன்று சிறுவன் நேற்று வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்து உள்ளான். அப்போது அசிறுவனின் தாய், அவனை கடைக்கு சென்று பால் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.

சிறுவன் வெளியே சென்றபோது அந்த வழியே உள்ள தேயிலை காட்டுக்குள் பதுங்கி இருந்த கரடி ஒன்று அவனை தாக்கி இழுத்து சென்று மறைந்து விட்டது. பல மணி நேரம் தேடுதல் நடைபெற்றது. அதன் பின்னர்  சிறுவனை சடலமாக மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வால்பாறை பகுதியில் இது போல் வனவிலங்குகளால் அடிக்கடி  உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.