தெரு நாய்களை காப்பகங்களில் அடைத்து வைக்கும் உத்தரவு நிறுத்திவைப்பு! புது அறிவிப்புகள் வெளியானது
- by David
- Aug 22,2025
டில்லியில் ஏற்படும் தெருநாய்கள் தொல்லை பற்றி நாளிதழ்களில் வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டு, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து 11.8.25 அன்று தெருநாய்களை- அவை கருத்தடை செய்யப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவையாக இருந்தாலும்- காப்பகங்களில் அடைத்து வைக்க உத்தரவிட்டது.
மீண்டும் அவை எங்கு பிடிப்பட்டதோ அங்கு திரும்பாத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பார்திவாலா மற்றும் மஹாதேவன் அமர்வு வெளியிட்டது.
இந்த உத்தரவு தெருநாய்கள் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என விலங்கு நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த உத்தரவை நிறுத்தி வைக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சரியா ஆகிய மூவர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.
இதன் இறுதியில், நீதிபதிகள் 11.8.2025ல் தெருநாய்களை காப்பகத்தில் மட்டுமே வைக்கவேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்தனர். அவர்கள் தங்கள் உத்தரவில், தெருநாய்களை பிடித்து, அவற்றிற்கு தடுப்பூசிகள் செலுத்தி, குடற்புழுக்களை நீக்கும் மருந்துகள் கொடுத்த பின்னர், அவை எங்கு பிடிப்பட்டதோ அங்கேயே விடவேண்டும் என உத்தரவிட்டனர்.
அதே சமயம், எந்த நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு உள்ளதோ அவற்றை காப்பகங்களில் வைக்கலாம். மிகவும் மூர்க்க தனமாக உள்ள தெரு நாய்களாக அடையாளம் காணப்படும் நாய்களையும் காப்பகங்களில் வைக்கலாம். மேலும் அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என கூறியுள்ளனர்.
பொது இடத்தில் வைத்து தெரு நாய்களுக்கு உணவளிக்க கூடாது என கூறிய நீதிபதிகள், இதே நேரத்தில் மாநகராட்சி இதற்கான தனி உணவளிக்கும் இடங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும், இங்கு வைத்து தெருநாய்களுக்கு உணவு வழங்க அனுமதி கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் தெருநாய் தொடர்பான தேசிய கொள்கை ஒன்றை உருவாக்கும் நோக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து மாநில துறைகளின் கருத்துக்களை நீதிமன்றம் கேட்டுள்ளது. மேலும் நாடுமுழுவதும் நிலுவையில் உள்ள தெருநாய் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற அவர்கள் அறிவுறுத்தினர். இந்த முடிவுகள் டில்லியில் மட்டுமல்ல, மொத்தமாக நாடுமுழுதும் நீட்டிக்கப்படும் என கூறியுள்ளனர்.