பாரதிய ஜனதா கட்சியின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை தனது தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டார்.

கோவைக்கான பிரத்தியேக வாக்குறுதிகளாக அவர் கூறியது:-

கோவையில் 4 நவோதயா பள்ளிகள் அமைத்து குழந்தைகளுக்கு உலகம் தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

கோவை பகுதியின் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு சிறப்பான பயிற்சிகள் கிடைப்பதை உறுதி செய்ய ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு பயிற்சி மையங்களில் ஒன்றான தேசிய விளையாட்டு ஆணையம் - பட்டியாலாவின் கிளை பயிற்சி மையம் கோவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயமுத்தூர் பாராளுமன்ற தொகுதிக்குள் அடுத்த 500 நாட்களுக்குள் (1.5 ஆண்டுகள்) 250 மோடி மக்கள் மருந்தகமருந்தகங்கள் நிறுவப்படும்.

வயோதிகர்களுக்கு உடல்ரீதியான மற்றும் உளவியல் ரீதியான சிறப்பு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய கோவையில் உலகத்தரம் வாய்ந்த தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தை கோவையில் அமைப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள புராதரமான ஆன்மீக தலங்களுக்கு கோவையிலிருந்து 10 புதிய ரயில்கள் இயக்க முயற்சிகள் எடுக்கப்படும்.

சபரிமலை யாத்திரையை ஒருங்கிணைக்க கோயம்புத்தூரிலே உதவி மையம் அமைக்கப்படும். 

கொங்கு மண்டலத்தில் மத்திய அரசின் உதவியோடு உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை நிறுவுவோம். ஆயுஷ்மான் பாரத்திட்ட பயனாளிகளுக்கு மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3 புட் பேங்க் (food bank) காமராஜர் பெயரில் உருவாக்கப்படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு கோவை மாநகரில் எந்நேரமும் யாருக்கு வேண்டுமானாலும் உணவளிக்க முயற்சிகள் எடுக்கப்படும்.

கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும்.

சரவணம்பட்டியில், மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை கோவையின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் கண்டுகொள்ள தவறிய கோவை விமான நிலையத்தை, உலகத் தரத்திற்கு விரிவாக்கம் செய்து நவீனமயமான விமான முனையமாக மாற்றப்படும். 

இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விமான சேவையை விரிவுபடுத்துவோம். விமான சரக்கு முனையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

திருச்சி சாலை -அவிநாசி சாலைக்கு இடையே மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து முனையம் அமைக்கப்படும்.

கோவை மக்களின் வசதிக்காக கோவைக்கென்று தனி ரயில்வே கோட்டம் அறிவிக்கப்பட்டு மூன்று புதிய ரயில் முனையங்களும் உருவாக்கப்படும், மேலும் வடகோவை மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்த ரயில் முனையங்களாக தரம் உயர்த்தப்படும். கோயம்புத்தூர் ரயில் சந்திப்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

கோயம்புத்தூர் சந்திப்பு. கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையம், பீளமேடு ரயில் நிலையம், இருகூர் ரயில் நிலையம், சிங்காநல்லூர் ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் புறநகர் ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் தேசிய அளவில் புகழ்பெற்ற ஐ.ஐ.எம். நிறுவனம் கொண்டுவர வலியுறுத்தப்படும்.

L&T பைபாஸ் சாலையின் ஒரு பகுதியான நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான பகுதி இரு வழி சாலையாக இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. குறுகலாக உள்ள இந்த 2 வழி சாலையை 8 வழி சாலையாக மாற்ற மத்திய அரசின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.  

விவசாய விளைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு குளிர்சாதன வசதியுடன் கூடிய விவசாய ஏற்றுமதி மையம் ஏற்படுத்தப்படும்.

சிறுதொழில்களுக்கு பலனளிக்கும் வகையில் கோவை அரசூரில் MSME தொழில்நுட்ப மையம் விரைவில் அமைக்கப்படும்.

கோவைக்கு Defense Corridor கொண்டுவந்ததை போல, Automotive Corridor அமைக்கப்பட்டு, ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்க மத்திய அரசின் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பழைய காலாவதியான வாகனங்களை நொறுக்கி அவற்றில் இருந்து பயனுள்ள பொருட்களை எடுத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் scrapped automobile breaking yard அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

20 ஆண்டுகளுக்கு முன்பு தங்க நகை தயாரிப்பில் இந்தியாவின் முதன்மை நகரமாக இருந்த கோவை தற்போது பொலிவிழந்து நிற்கிறது. இதனை மீட்டெடுக்கும் விதமாக மத்திய அரசின் உதவியுடன் கோவையில் தங்க நகை தயாரிப்பு பயிற்சி மையம் உள்ளடக்கிய ஆபரண தங்க நகை பட்டறை பூங்கா (Jewellery Park) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் இயங்கும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவுவதற்கும், மேம்படுத்துவதற்கும் மத்திய அரசின் மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

மத்திய அரசின் சுயசார்பு இந்தியா கொள்கையின் ஒரு பகுதியாக கோவை Defence Corridor-ன் முக்கிய அங்கமாக பாதுகாப்பு தளவாடங்களுக்கு தேவைப்படும் செமிகண்டக்டர் பாகங்களை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும். 

கடந்த 10 ஆண்டுகளில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் கோவை ஸ்மார்ட் சீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியை சிறப்பு தணிக்கை செய்ய உட்படுத்துவோம். இந்த தணிக்கையில் கண்டறியப்படும் முறைகேடுகள் மீது அதற்கு காரணமானவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பாஜக பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வலியுறுத்தப்படும்.