கோவையில் மூன்று ஆண்டுகளில் 400 பேருக்கு நுண்துளை ரத்த நாள அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை!
- by David
- Sep 22,2022
2019 ல் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவங்கப்பட்ட நுண்துளை ரத்த நாள அறுவை சிகிச்சை துறை, துவங்கிய ஆண்டு முதல் தற்போது வரை 400 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்து நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றியுள்ளது.
இதயம், குடல், மூளை போன்ற பல்வேறு இடங்களில் ஏற்படும் ரத்த நாள அடைப்புகளுக்கு உரிய சிகிச்சை எடுக்காமல் விடுவதன் மூலம் அடைப்புகள் ஏற்பட்ட பகுதி அழுகி கை, கால்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளுக்கு நுண்துளை ரத்த நாள அறுவை சிகிச்சையை உரிய நேரத்தில் செய்துகொள்வது உயிர் காக்கும் சிகைச்சையாக பார்க்கப்படுகிறது.
ஆஞ்சியோகிராம் எனும் பரிசோதனை மூலம் ரத்தநாள அடைப்புகள் கண்டறியப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்டிங் செய்வதன் மூலம் ரத்த நாள அடைப்புகள் மீண்டும் வராமல் தடுக்கப்படுகிறது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் குறைவான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மட்டும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 400 நபர்களுக்கு 2019 முதல் 2022 வரை இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த 400 பேரில் 100 பேர் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள். தனியார் மருத்துவமனைகளில் ரூ.3 லட்சத்துக்கு மேல் கட்டணமாகும் இந்த அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.