கரூர் சம்பவம் : சி.பி.ஐ விசாரணைக்கு பின்னர் நீதி கிடைப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
- by admin
- Oct 26,2025
செப்டம்பர் 27ம் தேதி விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பொது நிகழ்வில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
விஜய் தாமதமாக வந்தது இதற்கு முக்கிய காரணம் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினே கூறியிருக்கிறார். இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன? என்பது பற்றி சி.பி.ஐ விசாரித்து வருகிறது.
சி.பி.ஐ. விசாரணை முடிந்து உண்மை வெளிவரும் பொழுது நீதி கிடைப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என இன்று கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் விஜய் மாமல்லபுரத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, இந்த விவகாரத்தில் மற்றவர்கள் கூறி கருத்துக்குள்ளே செல்ல விரும்பவில்லை, கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் குறைந்தபட்சம் மக்களை பார்க்கிறார் என்பதே நல்ல விஷயம் தான் என தெரிவித்தார்.
28ஆம் தேதி துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவைக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பாஜக மற்றும் தனியார் அமைப்பு செய்து வருவதாக தெரிவித்தார்.
தமிழக பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா குறித்தான கேள்விக்கு, தேசிய கல்விக் கொள்கையை ஒரு புறம் எதிர்க்கிறார்கள் ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கக்கூடிய பல்வேறு விஷயங்களை எடுத்து புதிதாக கல்வி கொள்கை திட்டத்தில் செயல்படுத்துகிறோம் என்று திராவிட மாடல் அரசு கூறுவதாக தெரிவித்தார்.








