கோவை கிரைம் செய்திகள் - 26.10.25
- by admin
- Oct 26,2025
கத்தியை காட்டி கல்லூரி மாணவர்களை மிரட்டி செல்போன்களை பறித்த கல்லூரி மாணவர்கள்!
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சைமன் என்ற மாணவர் பி.டெக் படித்து வந்து உள்ளார். அவர் அவரது நண்பர்கள் 8 பேருடன் அருகில் உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கி கல்லூரி சென்று வந்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 11 ம் தேதி அனைவரும் உறங்கிக் கொண்டு இருந்த நேரத்தில் அறையின் கதவை அதே கல்லூரியில் படிக்கும் மானாமதுரையைச் சேர்ந்த சுபாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 5க்கும் மேற்பட்டோர் தட்டி உள்ளனர். சத்தம் கேட்டு கதவை திறந்த போது சுபாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சைமனில் கழுத்தில் வைத்து அனைவரது செல்போன்களை தருமாறும், மேலும் செல்போன் பாஸ்வேர்ட் மற்றும் கூகுள் பே பாஸ் வேர்ட் ஆகியவற்றையும் வாங்கி உள்ளனர்.
மேலும் இதை வெளியில் சொன்னால் அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டிச் சென்று உள்ளனர். இதை அடுத்து சைமன் அவரது நண்பர்களுடன் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்து இருந்தார்.
புகாரைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் இதில் தொடர்புடைய அதே கல்லூரியில் படித்து வந்த சிவகங்கையைச் சேர்ந்த சுபாஷ்கண்ணன் , அவரது நண்பர்களான பிரவீன்சந்தோஷ், மகேஷ் மூன்று பேரும் மற்றும் 17 வயது உள்ள 3 சிறார்களை ஆகிய ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்து 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து 3 சிறார்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மற்றவர்களை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.
வங்கி கணக்கில் பணம் வைத்துள்ள வயதானவரை குறிவைத்து டிஜிட்டல் அரெஸ்ட் பிராட் செய்த கும்பல் சிக்கியது
சென்னையில் தமிழக அரசு துறையில் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற 69-வயது முதியவர் கோவை துடியலூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2025 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் " நீங்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்க உதவி உள்ளீர்கள். உங்கள் வங்கி கணக்கு மூலம் இது நடந்து உள்ளது. உங்களை டிஜிட்டல் கைது செய்து உள்ளோம்" என கூறி அவரை அதிர்ச்சி அடைய செய்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த முதியவரிடம் உங்கள் வங்கிக் கணக்கில் பண பரிவர்த்தனை நடந்து உள்ளதாக கூறி உள்ளனர்.
அந்த முதியவர் அப்படி தான் எதுவும் செய்யவில்லை தன் மீது தவறில்லை எனக் கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து அந்த மர்ம ஆசாமி உங்கள் இந்தியன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஹெச்.டி.எஃப்.சி என்ற வங்கிக் கணக்கிற்கு அனுப்புங்கள், சரியாக இருந்தால் திருப்பி அனுப்புகிறோம் என்று கூறி மிரட்டி உள்ளனர்.
இதை அடுத்து அவர் ஓய்வு தொகை உள்ளிட்ட தனது பணம் ரூ.29,88.000 ஐ அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் அந்த பணம் மீண்டும் அவருக்கு வராததால், அவருக்கு வந்த அலைபேசி எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர். அந்தப் பணத்தில் இருந்து ரூ. 6 லட்ச ரூபாயை அந்த மோசடி கும்பல் எடுத்து உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து ரூ. 6 லட்ச பணத்தை எடுத்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த நபீல் என்பதும், அவருடன் ஹரிஷ் என்ற குட்டாஸ் மற்றும் முகமத் ராமீஸ் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.








