நொய்யல் ஆற்றை கடந்த வனப்பகுதிக்குள் சென்ற ஒற்றை கொம்பன்!
- by admin
- Oct 26,2025
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் நரசிபுரம் பகுதியில் அதிகாலை நேரத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அலறவிட்ட ஒற்றைக் கொம்பன் காட்டு யானை நேற்று இரவு ஆலாந்துறை அருகே உள்ள இருட்டுப்பள்ளம் கிராமத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி இருக்கிறது.
வனத்தை விட்டு வெளியே வந்த இந்த யானை அங்கு உள்ள விவசாய நிலங்களில் சேதம் விளைவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இன்று அதிகாலை நொய்யல் ஆற்றுக்குள் இறங்கி வனப்பகுதிக்குள் சென்றது. இதனை அப்பகுதி மக்கள் செல்போனில் பதிவு செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.
ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம் பகுதிகளில் ஒற்றைக் கொம்பனும், தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதிகளில் “வேட்டையன்” என அழைக்கப்படும் மற்றொரு யானையும் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன. காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதைக் கட்டுப்படுத்த வனத்துறை அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.








