நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் : 22 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகிறது; கோவை மக்கள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் வேண்டுகோள்
- by David
- Aug 30,2025
தமிழக மக்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற சிறப்பு திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடைபெற்றுவருகிறது.
இதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 2ம் தேதி துவக்கி வைத்தார். கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று கோவை வடவள்ளி அருள்மிகு ஸ்ரீ மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
இதை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் 'கணபதி' ராஜ்குமார் , மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் நோய், தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம், ஆயிஷ் மற்றும் சித்த மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், காசநோய் மருத்துவம் உள்ளிட்ட 22 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை வழங்குதல், மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளும் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மேற்காணும் மருத்துவப்பிரிவுகளில் உயர் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் பரிசோதனைகள் செய்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள், மாணவ/மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை பலன்களை பெற்று பொது மக்கள் அனைவரும் நலமோடு வாழவேண்டுமென மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, மருத்துவ முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்து காப்பீட்டு அட்டை மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை பயனாளிகளுக்கு கலெக்டர் பவன்குமார் வழங்கினார்.