ஒட்டுமொத்த தமிழகத்தில் கோவை சிட்டி போலீஸ் தான் இந்த விஷயத்தில் 'நம்பர் 1'
- by David
- Aug 20,2025
கோவை மாநகரில் உள்ள ஒருவர் தனக்கு ஒரு பிரச்சனை என்றோ அல்லது ஆபத்து என்றோ அவசர உதவி எண் 100க்கு அழைத்தவுடன் அவர் இருக்கும் இடத்திற்கு கோவை மாநகர காவல் துறையினர் வர சராசரியாக 11.35 நிமிடங்கள் எடுத்துக்கொள்கின்றனர் என்பதும், மாநிலத்தில் உள்ள பிற மாநகரங்களை ஒப்பிடும் போது கோவை போலீசார் தான் விரைவாக வருவதில் முதலிடத்தில் உள்ளனர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் இது போன்ற அழைப்பு வந்தால் அங்கு கோவை மாநகர போலீசார் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆனது எனவும், தற்போது ஜி.பி.எஸ். எனும் புவி இடம் காட்டும் தொழில்நுட்பம் மூலம் 15 நிமிடங்களுக்குள் போலீசார் வந்துவிடுவதாகவும் கோவை மாநகர போலீஸ் கமிஷ்னர் சரவணசுந்தர் கூறியுள்ளார்.
போலீசார் விரைவாக சம்பவ இடங்களுக்கு செல்வது பற்றிய ஆய்வு ஆகஸ்ட் 1 முதல் 15 வரை நடைபெற்றுள்ளது. இதில் கோவை முதலிடத்திலும், அதற்கு அடுத்த இடங்களில் திருப்பூர் (13 நிமிடங்கள்), சென்னை தெற்கு - போக்குவரத்து பிரிவு (17நிமிடங்கள்) மற்றும் சேலம் (21 நிமிடங்கள்) உள்ளன.
கோவை மாநகரில் மொத்தம் 59 வழித்தடங்களில் 24 மணி நேரமும் இரு-சக்கர வாகனத்தில் ரோந்து செல்ல போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 30 இடங்களுக்கு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் உள்ளது. எனவே கட்டுப்பட்டு அறைக்கு அழைப்பு வந்ததும், அழைக்கும் நபரின் இடத்தை அறிந்துகொள்ளும் கட்டுப்பாட்டு அறை போலீசார், அங்கிருந்தே, அந்த அழைப்பாளரின் அருகே உள்ள ரோந்து அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு விரைந்துசெல்ல அறிவுறுத்துவார்கள். இதனால் வேகமாக பணிகள் நடக்கின்றன.
காவல் துறையின் 24 நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ். வசதி உள்ள நிலையில், 2 சக்கர ரோந்து வாகனங்களில் மீதம் உள்ள 29 வாகனங்களிலும் ஜி.பி.எஸ். வசதியை விரைவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.





