தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நடுநிலை, மேல்நிலை மற்றும் உயர்நிலை ஆகிய பள்ளிகளில் பயிலும் சுமார் 27 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மசக்காளிபாளையம் பள்ளி மாணவி வர்ஷா மாவட்டத்தில் முதல் இடத்தையும், மாநில அளவில் சாதனையையும் செய்துள்ளார்.

 

இது குறித்த விவரம் பின்வருமாறு:-

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குத் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS-National Means-cum-Merit Scholarship Scheme) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

இதற்கான தேர்வில், பங்கேற்கும் மாணவ,மாணவியர்களின் குடும்ப வருமானம் ரூ 1.50 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதுடன், பிள்ளைகள் 7ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வில் குறைந்தபட்சம், 55% மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகும். 

 

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு அவர்களின் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48,000/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு வருடமும் ரூ.12,000/- வீதம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

 

மேலும், இத்தேர்வு தொடர்பாக மாணவ மாணவியர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

 

தற்போது இத்தேர்வில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நடுநிலை, மேல்நிலை மற்றும் உயர்நிலை ஆகிய பள்ளிகளில் பயிலும் சுமார் 27 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

குறிப்பாக மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவி வர்ஷா மாவட்ட அளவில் முதலிடத்தையும் மற்றும் மாநில அளவில் 38-வது இடத்தினையும் பிடித்து கோவை மாநகராட்சிக்கும் மற்றும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

 

மேலும், கோயம்புத்தூர் மாவட்ட அளவில் 229 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாநகராட்சி நிர்வாகம் இன்று தெரிவித்தது.