கொலை குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்தது நீதிமன்றம்

 

கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய எல்லையில் கடந்த 2022-ம் ஆண்டு பாண்டியன் (வயது 52) என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில், அதே பகுதியைச் சேர்ந்த விநாயகசுந்தரம் மகன் சந்தானம் (வயது 62) என்பவருக்கு சிறுமுகை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இவ்வழக்கின் விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று (28.10.2025) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்ட சந்தானம் (62) என்பவருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

 

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த புலன்விசாரணை அதிகாரியும், வழக்கு தொடர்பான சாட்சிகளை நீதிமன்றத்தில் திறம்பட ஆஜர்படுத்திய தலைமை காவலரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.

 

கோவை அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரின் மனைவி கொலை – ஓட்டுநர் சரண்

 

கோவை மாவட்டத்தில் அதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவருமான கவிசரவணகுமார் அவர்களின் மனைவி மகேஸ்வரி (47) கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தகவலின் படி, கவிசரவணகுமார் தனது மனைவி மகேஸ்வரி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தாளியூரில் வசித்து வந்தார். அவர்களுடன் வீட்டில் ஓட்டுநராக 45 வயதான சுரேஷ் பணியாற்றி வந்தார். 

 

இன்று காலை கவிசரவணகுமார் வீட்டை விட்டு வெளியே சென்றார். குழந்தைகளும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த மகேஸ்வரியை சுரேஷ் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, வடவள்ளி காவல் நிலையத்திற்கு சென்று தானாகவே சரண் அடைந்தார். 

 

தகவல் அறிந்த வடவள்ளி காவல் துறையினர் தடாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தடாகம் போலீசார் சம்பவ இடமான தாளியூரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மகேஸ்வரியின் உடல் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. 

 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.