கோவையில் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தியேட்டர், பஸ்களில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் - மாவட்ட சுகாதாரத்துறை
- by David
- Apr 05,2023
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 10-15 என்ற அளவில் கடந்த சில நாட்கள் இருந்துவருகிறது. கோவையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவமனைகள், தியேட்டர், வணிக வளாகங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.
இது பற்றி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் நோயாளிகள் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களில் 90 சதவீதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தனிச்சையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. மேலும், மருத்துவமனைகள், வணிக வளாகம், தியேட்டர், பஸ்களில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இதனால், கொரோனா பரவலை தடுக்க முடியும். தடுப்பூசி செலுத்தாத நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.