10ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து, வருங்காலத்திற்கு வழிகாட்டிய மகாலிங்கம் பொறியியல் கல்லூரி
- by David
- Sep 27,2025
பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (MCET) வளாகத்தில் உள்ள நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு விழா மையத்தில், பரிசளிப்பு விழா மற்றும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது வழங்குவதற்காகவும் அவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டுதல் வழங்கவும் இந்த விழா டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்லூரி துணை முதல்வர் A. செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, கல்லூரி முதல்வர் பி. கோவிந்தசாமி தலைமை உரை ஆற்றினார். அவர், எதிர்கால வெற்றிக்குத் தேவையான தெளிவான நோக்கம் மற்றும் விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, 'தொழில் வழிகாட்டி' ஜெயபிரகாஷ் காந்தி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சிறப்புரையாற்றினார்.
அவர், தனது உரையில், மாணவர்கள் தங்களின் திறமை மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்கள் புதுப்புது பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம், புதிய கல்விக் கொள்கை வலியுறுத்தும் பல்வகை துறை கற்றல் ( Interdisciplinary learning) மூலம் அனைத்து துறை சார் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும், என பேசினார்.
ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளை கற்பதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பது பற்றியும், மாணவர்கள் 'கேட்கும் திறன்' மற்றும் 'கவனித்தல் திறன்' ஆகியவற்றை வளர்த்து அறிவை மேம்படுத்தல் வேண்டும் என வலியுறுத்தினார்.
வால்பாறை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர், தாராபுரம், திண்டுக்கல், பழனி ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த பள்ளியளவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 300 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் அருட்செல்வர் Youth Icon விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மாநில அளவில் முதலிடம் பெற்ற கந்தசாமி மெட்ரிக் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் எம். கார்த்திக் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விழா நிறைவில், அட்மிஷன் ஒருங்கிணைப்பாளர் திரு. பி. கதிர்வேல் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில், NPTC கல்லூரி முதல்வர், பள்ளி தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.