கோவையில் இணையம் வழியே வேலை தேடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்! என்ன விஷயம்?
- by David
- Jul 23,2025
கோவை மாவட்டத்தில் படித்து முடித்து விட்டு வேலை தேடுபவர்களுக்கு உதவ அரசு தரப்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாதம் ஒரு முறை நடத்தப்படுகிறது. வேலை தேடுபவர்களையும், வேலை வழங்க தயாராக உள்ள தனியார் நிறுவனங்களையும் இணைக்க ஒரு பாலமாக இந்த முகாம்கள் செயல்படுகின்றன.
இன்று உலகமே இணையத்தளத்தில் இயங்குகிறது என்பதால் வேலை தேடுவோர் நலன் கருதி, https://www.tnprivatejobs.tn.gov.in/ எனும் அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் எப்போதெல்லாம் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்பதை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகாம்களில் கலந்துகொள்ள விரும்பும் வேலை தேடுவோா் மற்றும் தனியாா் நிறுவனங்கள் இந்த இணையத்தளத்தில் எவ்வித கட்டணமும் இல்லாமல் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் இந்த தளத்தில் வழங்கும் எந்த சேவைக்கும் கட்டணம் கிடையாது.
ஆனால் தற்போது சில இணையதள பக்கங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள் அரசின் அதிகாரபூர்வ வேலைதேடுவோருக்கான இணையதளத்துடன் தொடர்பு உள்ளதாக கூறி, அதன் சின்னத்தை (லோகோ/லட்சினை) பயன்படுத்திக்கொள்கின்றதாக புகார் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபோல அரசு தொடர்பான தளத்தின் சின்னத்தை பயன்படுத்துவது தவறானது.
அரசின் அதிகாரபூர்வ வேலைதேடுவோருக்கான இணையதள சேவைகள் வேலைதேடுபவர்கள் நலனுக்காக இலவசமாகவே வழங்கப்படுகிறது. எந்த ஒரு பதிவு செய்தல், விண்ணப்பம், நேர்காணல் தொடர்பான பணிகளுக்கும் இந்த தளம் கட்டணம் என்பதை பெறுவது இல்லை. அவ்வாறு இந்த இணையதளத்தின் சின்னத்தை கொண்டு ஏதாவது நிறுவனமோ, இணையத்தளமோ கட்டணம் செலுத்தவேண்டும் என்று கூறினால், மின்னஞ்சல் அனுப்பினால் அதை 044-29580200 மற்றும் 1930 ஆகிய சைபர் கிரைம் எண்கள் மூலம் தெரியப்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்கள் ஊரில் அரசு தரப்பில் நடத்தப்படும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற முகவரியை பயன்படுத்துங்கள். இதன் சேவைகள் என்றும் இலவசமே.