கூகிள் பே, போன் பே மூலம் அதிக பரிவர்த்தனை செய்தால் ஜி.எஸ்.டி. நோட்டீஸ் வருமா?
- by David
- Jul 23,2025
யு.பி.ஐ. தொழில்நுட்பம் மற்றும் அதிவேக மொபைல் இன்டர்நெட் வசதி வந்தபின்னர் இன்று சாலையோரம் அமைந்துள்ள கடைகள் முதல் ஷாப்பிங் மால்களில் உள்ள கடைகள் வரை 'கூகிள் பே', 'போன் பே' போன்ற மொபைல் செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து தொகையை வியாபாரிகள் எளிமையாக பெறுகின்றனர்.
ஆனால் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும், அண்டை மாநிலங்களிலும் உள்ள சிறு வியாபாரிகள் இன்று வரையிலும் யு.பி.ஐ. மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வழங்கும் 'கூகிள் பே', 'போன் பே' உள்ளிட்ட செயலிகள் வழியே வாடிக்கையாளர்களிடம் பணம் பெறுவதில்லை. தொகையாக மட்டுமே பெறுகின்றனர். இதற்கு ஒரு காரணமாக அறியப்படுவது, அதிக பணப்பரிவர்த்தனை செய்தால் ஜி.எஸ்.டி. நோட்டீஸ் வரும் என அவர்களுக்கு உள்ள ஐயமே.
இது எந்த அளவு உண்மை?
இது வெறும் பாதி உண்மையே. சேவை பிரிவில் வியாபாரம் செய்பவர்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை யு.பி.ஐ. மூலம் பண பரிவர்த்தனை செய்தால் அதற்கு ஜி.எஸ்.டி. கட்டணம் கிடையாது. அதேபோல வர்த்தகர்கள் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரை செய்யும் பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி.கிடையாது. இந்த வரம்புக்கு மேல் செல்லும்போது தான் ஜி.எஸ்.டி. பதிவு செய்வது அவசியமாகிறது.
ஜி.எஸ்.டி. பதிவு செய்த பின்னர், ஒருவர் யு.பி.ஐ. மூலம் முதல் ஆண்டில் ரூ. 50 லட்சம் பணப்பரிவர்த்தனை செய்தால், அதில் ரூ.40 லட்சதுக்கு எந்த வரியும் இல்லை. அதற்கு அடுத்து உள்ள ரூ.10 லட்சத்துக்கு 1% செலுத்தினால் போதும்.
ஒருவேளை நிறுவனம் துவங்கிய முதல் நாளிலேயே ஜி.எஸ்.டி பதிவு செய்திருந்தால் அப்போது இருந்து ஜி.எஸ்.டி கட்ட வேண்டியது இருக்கும்.
ஆண்டுக்கு ரூ.1.5 கோடி பரிவர்த்தனை செய்தாலும் கூட 1% அதாவது ரூ. 1.5 லட்சம் (ஒன்றரை லட்சம்) மட்டும் தான் செலுத்த வேண்டும்.
வியாபாரிகள் செய்ய வேண்டியது...
தனிப்பட்ட செலவுக்கு ஒரு வங்கி சேமிப்பு கணக்கை வைத்துக்கொண்டு, வியாபாரத்துக்கு என கரண்ட் அக்கவுண்ட் (நடப்பு கணக்கு) வைத்து, இதற்கான யு.பி.ஐ. முகவரி அல்லது கியூ.ஆர்.கோட் மூலம் தாராளமாக டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக பரிவர்த்தனைகளை செய்யலாம்.
'வரி செலுத்த வேண்டியதில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ள வரம்புக்கு மேல் பரிவர்த்தனை செல்லும் பொது அதை குறித்து வைத்துக்கொண்டு அதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும். இதுவே சரியான முறை.
அதிக வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும், ஜி.எஸ்.டி. பதிவு செய்யாமல் வெறும் ரொக்கத்திலேயே வியாபாரம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தால், இங்கு தான் ஆபத்து உள்ளது. எப்போதாவது விசாரணையில் இது பற்றி தெரியவந்தால், இதற்கான அபராதம் என்பது மிக பெரிதாக இருக்கும்.
எனவே வியாபாரம் செய்யும் சிறு நிறுவனமோ, பெரும் நிறுவனமோ, யு.பி.ஐ. மூலம் தயக்கம் இன்றி பணப்பரிவர்த்தனை செய்யலாம்.
வேறு சில காரணங்கள்
கூகிள் பே, போன் பே மூலம் கட்டணங்களை பெற வியாபாரிகள் சிலர் விருமாபாதற்கு வேறு சில காரணங்கள் உண்டு. இனைய வழி கட்டணங்களை பெறும் போது, ஒரு சில வாடிக்கையாளர்கள் தங்களை ஏமாற்றி விடுவார்களோ, அல்லது தனக்கு செலுத்தப்பட்டதாக கூறும் பணம் தன் வங்கி கணக்கில் வெளிப்பட தாமதம் ஆகுமோ, அல்லது இதுபோன்ற டிஜிட்டல் பரிவர்தனை செய்பவர்கள் எளிதில் சைபர் மோசடிகளால் பாதிக்கப்படுவார்களோ என்கின்ற அச்சம் சிலரிடம் உள்ளது.
அரசு தான் இதுபற்றி அவர்களுக்கு விழிப்புணர்வையும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக ஆக்கவும், சைபர் குற்றங்கள் மூலம் இழக்கப்படும் பணங்களை மிக வேகமாக மீட்டு கொடுத்து இந்த அச்சத்தை போக்க வேண்டும்.
நன்றி : ஜலபதி - ஆடிட்டர்