இந்திய வருமான வரி சட்டம் 1961க்கு மாற்றாக திருத்​தப்​பட்ட புதிய வரு​மான வரி மசோதா 2025 நேற்று மக்களவை​யில் நிறைவேறியது. இந்த நிலையில் இன்று மாநிலங்களவையிலும் இது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இன்று மக்களவையில் இதுபற்றி பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருந்து வந்த வருமான வரி சட்டம் 1961 என்பது மிகவும் சிக்கலான கட்டமைப்பை கொண்டிருப்பதால், அதை புரிந்துகொள்வதற்குக் மிக கடினமானதாக இருந்தது.

அதில் உள்ள விதிகளைப் பலரும் பலவிதமாகப் புரிந்துகொள்ளும் சூழல் இருந்தது. இந்த சட்டத்தின் தெளிவற்ற மொழியே பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருந்தது எனவும் அதை பயன்படுத்துவது மிக கடினமாக இருந்தது எனவும் கூறினார்.

திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவில் மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உட்பிரிவுகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. 

பழைய வருமான வரி சட்டத்தில் இருந்த வார்த்தைகள், அத்தியாயங்கள், புதிய வருமான வரி சட்டத்தில் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. பழைய சட்டத்தில் 47 அத்தியாயங்கள்,  5.12 லட்சம் வார்த்தைகள் இருந்தன.  அதுவே புது மசோதாவில், 23 அத்தியாயங்கள், மற்றும் 2.59 லட்சம் வார்த்தைகளே உள்ளன.

புது மசோதாவில் பல சிறப்பம்சங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் காப்பீடு திட்டம், பென்ஷன் நிதி உள்ளிட்ட சில நிதி திட்டங்களில் இருந்து கிடைக்கும் கணிசமான தொகைக்கு, இனி முழுமையாக வரி விலக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுகிறது. எனவே ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்து, இந்த மசோதா சட்டமாகி, 1.4.2026ல் நடைமுறைக்கு வரும்போது வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் இதனால் பலன்கள் கிடைக்கும் என பரவலான எதிர்பார்ப்புகள் உள்ளன.