ரூ.930 கோடி மோசடி செய்த நிதி நிறுவன வழக்கு: தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் ஐ.ஜி. தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
- by admin
- Nov 23,2023
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம் மக்களின் ரூ.930 கோடி பணத்தை மோசடி செய்தது.
இந்த வழக்கில் பாசி நிதி நிறுவனத்தின் பெண் இயக்குநர் கமலவள்ளியை கடத்தி பணம் பறித்ததாக அப்போதைய மேற்கு மண்டல ஐஜி பிரமோத் குமார் உட்பட 5 பேர் மீது சிபிஐ கடந்த 2011 ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஐஜி பிரமோத் குமார் உட்பட 5 பேர் மீது சிபிஐ குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் ஐஜி பிரமோத் குமார் தரப்பில் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பிரமோத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் வழக்கு மீது மேல் விசாரணை நடத்த உத்தரவு அளித்த நிலையில் கோவை சிபிஐ நீதிமன்றம் ஐ.ஜி பிரோமத் குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வருகின்ற நவம்பர் 28ம் தேதி வழக்கில் சேர்க்கப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.