தமிழக அரசு கொண்டுவந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் இதுவரை 7 கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

7ம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டமாக  இம்மாதம் 6ம் தேதி அன்று கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற உறுப்பினர், 2 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒரே இடத்தில வைத்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில், தொழில்துறைக்கான மின்சார நிலைக்கட்டணத்தை முழுமையாக திரும்பபெற வேண்டும். பீக்ஹவர் கட்டணம் முழுமையாக திரும்பபெற வேண்டும். தமிழ்நாட்டின் தொழில் நிலை சீரடையும் வரை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு மின்கட்டண உயர்வு கைவிட வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.

மேலும் அதில் தொழில்களை பாதுகாக்கும் பொருட்டாக மக்களின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் உள்ள 10 லட்சம் தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரமும் 1கோடிக்கு மேல் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தமிழக சட்டமன்றத்தில் தொழில் சார்ந்த பிரச்சினைக்கு தனி தீர்மானம் கொண்டு வந்து விவாதித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அண்மையில் சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு  தீர்மானத்திற்கு அமைச்சர் தா.மோ. அன்பரசு பதில் அளிக்கையில் பதிவு செய்ததை G.O வாக தற்போது  வெளியிட்டு உள்ளனர். இதை தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பு ஏற்க்கவில்லை எனவும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் அறவழியில் தொடரும் என தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால் மற்றும் ஜேம்ஸ் இன்று தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால் மற்றும் ஜேம்ஸ் மின் வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் பல லட்சம் தொழில் முனைவோர் கடனில் தத்தளிப்பதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் சிறுகுறு தொழில் கூடங்கள் மற்றும் தொழில் முனைவோர் என பல லட்சம் பேர் உள்ளனர் என தெரிவித்த அவர்கள் கோவை மாவட்டத்தில் மட்டுமே சுமார் 1,67,000 பேர் இருக்கின்றனர் எனவும், வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடன் வாங்கி சம்பளத்துடன் தீபாவளி போனஸ் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மின் கட்டணம் உயர்வை ரத்து செய்யவிட்டால் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி மனித சங்கலி போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்த போவதாக அறிவித்தனர்.

430% உயர்த்தப்பட்ட டிமாண்ட் சார்ஜ் முற்றிலும் திரும்ப பெற வேண்டும், TOD மீட்டர் பொறுத்தும் வரையில் தற்காலிக ரத்து  என அறிவித்ததை ஏற்கவில்லை நிரந்திரமாக நீக்க வேண்டும், சொந்த முயற்சியில் சோலார் மூலம்  மின்சாரத்தை தங்கள் பெறுவதற்க்கு அரசுக்கு யூனிட் ஒன்றுக்கு 1.53 பைசா கட்டணம் கேட்பதை  முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என தெரிவித்தனர்.

Last edited : 11.11.23 at 2:34 p.m.