கோவை மாநகரில் உள்ள பரபரப்பான பேருந்து நிலையங்களில் ஒன்றான, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிலையம்.

அரசு பேருந்துகளுக்கு காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்கள் உள்ளநிலையில், தனியார் பேருந்துகளுக்கு கோவை மாநகராட்சி - மத்திய மண்டலத்தில் வார்டு 48ல் ஜி.பி. சிக்னல் அருகே மேம்பால பகுதி அருகே சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. 

அதிகரித்து வரும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை, பயணிகள் எண்ணிக்கை மற்றும் மற்ற அவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதை ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் தரமுயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த பேருந்து  நிலையத்தின் சீரமைப்பு மற்றும் தரமுயர்த்தல் பணிகளுக்கான பூமிபூஜை கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடந்தது. அதற்கு அடுத்து பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முழுவீச்சில் துவங்கின.

தற்போது இந்த வளாகம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வளாகத்திற்குள் மேற்கூரை, பேருந்துகள் நிறுத்தும் வசதி, கழிவறைகள், கடைகள், மழைநீர் வடிகால், பச்சிளம்குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலுட்டிட அறைகள் என பல வசதிகள் இங்கு அமைந்திட பணிகள் நடைபெற்றுவருகிறது.

நாளொன்றுக்கு சுமார் 1500 முதல் 1800 பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர் பயன்படுத்த சிறந்த கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதை கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவர் உடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் சென்று ஆய்வில் கலந்துகொண்டனர்.

முன்னதாக கோவை மாநகராட்சி தரப்பில், கட்டுமான பணிகள் துவங்கி 6 மாதங்களில் இதை முடித்திட தினமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி பார்க்கையில், செப்டம்பர் மாதம் இந்த நவீனமயமாக்கும் பணிகள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.