ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு உடன் இணைந்து, 'குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2025' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. 

இந்த நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராகத் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் டி.எம். அன்பரசன கலந்துகொண்டார். 

கல்லூரியின் முதல்வர் ஏ. சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியை நடத்தும் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் R. சுந்தர் தலைமை வகித்துப் பேசியதுடன், புதிய முயற்சிகளையும், புத்தாக்கத்தையும் வளர்ப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பற்றி வலியுறுத்தி உரையாற்றினார்.

அமைச்சர் டி.எம். அன்பரசன் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட "புதுமையில் ஒற்றுமை - மனித உருவாக்கம் ரோடு ஷோவை" கல்லூரி வளாகத்தில் துவக்கி வைத்தார்.

இந்த ரோடு ஷோ, அக்டோபர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ள உலகளாவிய தொடக்க உச்சி மாநாடு 2025-க்கான ஒரு முன்னோடி மற்றும் விழிப்புணர்வுத் தளமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் மூலம் நடைபெற்ற எம்.எஸ்.எம்.இ ஐடியா ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்று ரூ.75 லட்சம் பரிசு பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த பேராசிரியர்களுக்கும் அமைச்சர் அன்பரசன் பரிசு வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் டாக்டர் அதுல் ஆனந்த், ஐ.ஏ.எஸ்., அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர், ஸ்டார்ட்அப் டி.என்-இன் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதன் மற்றும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், 50 தொடக்க நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.