தமிழ்நாடு சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா உள்பட 10 சட்டத் திருத்த மசோதாக்களை ஆளுநர் சில நாட்களுக்கு முன்னர் (13.11.23) திருப்பி அனுப்பியிருந்தார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை தெளிவாக எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தது. 

இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்.

அதன்படி அந்த 10 மசோதாக்கள்  (சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா,  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா,  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா , தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர்  பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா , தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா , தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா,  தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா , அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா , தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா) மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றுவதற்காக முதலமைச்சர் இன்று கொண்டுவந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  
அதிமுக மற்றும் பாஜக வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு இன்றே அனுப்பப்படும் என கூறப்படுகிறது. 

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் சட்ட பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அதற்கு அவர் ஒப்புதல் தரவேண்டும் அல்லது அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிகிறது.