பின்னலாடை ஏற்றுமதியில் தேசிய அளவில் முக்கியமான நகரமாக திருப்பூர் உள்ளது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் போரால் இந்த மாவட்டத்தின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  


போர் சூழல் நிலவுவதால் இந்த இரு நாடுகளுடன் தொடர்பில் உள்ள மற்ற நாடுகள் வர்த்தக ரீதியில் சிக்கனம் காட்டிவருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெரிய அளவில் ஆர்டர்கள் திருப்பூருக்கு வருவது குறைந்துள்ளது. 


இதுபற்றி தேசிய வர்த்தக வளர்ச்சி வாரிய உறுப்பினர் ராஜா சண்முகம் கூறியதாவது:- 

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. நூல் விலை உயர்வுக்கு பிறகு ஏற்பட்ட சரிவு இதுவரை சரியாகவில்லை. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக நூற்பாலைகள் மற்றும் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.


குளிர்கால ஆர்டர் (Winter season orders)  புக்கிங் முடிந்த நிலையில் திருப்பூருக்கான ஆர்டர்கள் 40 % வரை குறைந்து போக வாய்ப்புள்ளது. விசாரணை இருந்தும், ஆர்டர் உறுதியாகவில்லை. 

குறு, சிறு, நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் திகைத்துப்போயுள்ளன. ஊரடங்கு நேரத்தில் மத்திய அரசு சலுகை வழங்கி காப்பாற்றியது. நிலுவையில் உள்ள வங்கிக்கடனில் 30 % கூடுதல் கடன் வழங்கப்பட்டது. தற்போது 20 % கூடுதல் கடன் வழங்க வேண்டும். 

மேலும் 6 மாத காலத்துக்கு கடன் மீதான வட்டி மற்றும் தவணை செலுத்துவதில் இருந்தும் சிறப்பு சலுகை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.


(WITH INPUTS FROM DINAMALAR)