கடந்த ஆண்டின் துவக்கத்தில் கோவை உள்பட தமிழகத்தின் 3 இடங்களில் அதிநவீன தொழில்நுட்ப நகரங்கள் உருவாக்க தமிழக அரசு முடிவு செய்து Tamil Nadu Tech City திட்டத்தை அறிவித்தது.

இந்த நகரங்களில் ஐ.டி நிறுவனங்களுக்கு தேவையான ஆய்வு-ஆராய்ச்சி கூடம், ஐடி துறை சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்க தேவையான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள், தங்கும் இடங்கள், வணிகத்திற்கான இடங்கள், முதல் ரக அலுவலகத்திற்கான இடங்கள், பொழுதுபோக்குக்கான அம்சங்கள் மற்றும் வளாகங்கள், உணவகங்கள், பல திரைகள் கொண்ட திரைப்பட வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், தடை இல்ல மின்சாரம், சீரான குடிநீர் விநியோகம், பூங்காக்கள், மிக வேகமான இன்டெர்ன்ட் வசதி (OPTICAL FIBER CABLE INFRA)  போன்ற பல வசதிகள் உள்ளடங்கும்.

சென்னையில் உள்ள IT காரிடோர் பகுதியில் 150 ஏக்கர் நிலப்பரப்பிலும், ஓசூரில் 500 ஏக்கர் நிலப்பரப்பிலும் தொழில்நுட்ப நகரங்கள் அமையவுள்ளதாக கடந்த ஆண்டு அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த திட்டம் கோவையில் சோமையம்பாளையம் கிராம பகுதியில் சுமார் 321 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு- தனியார் கூட்டாக அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இதுபற்றி அமைச்சர் அன்றும் இன்றும் சொன்னது என்ன?

8.9.2023 அன்று கோவை வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - கோவை ஐ.டி. துறையில் சிறப்பான வளர்ச்சியை வெளிப்படுத்திவருவதாகவும் கோவையில் இந்த அதிநவீன தொழில்நுட்ப நகர திட்டத்திற்கான நிலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த அதிநவீன தொழில்நுட்ப நகரங்கள்  திட்டத்தை செயல்படுத்திட செயல் திட்ட அறிக்கை விரைவில் தயார் செய்யப்பட்டு  அரசு அதை வெளி கொண்டு வரும் என தெரிவித்தார்.

26.9.2024 தற்போது கோவை வந்த அமைச்சர் - ஐ.டி. துறை சார்ந்து அரசு அறிவித்த திட்டங்கள் எல்லாம் வேகமாக நடத்திட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த தொழில் நுட்ப நகரங்களில் ஐ.டி நிறுவனங்களுக்கு தேவையான அலுவலகம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள், தொழில் சார்ந்த கட்டமைப்புகள், பொது மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்கள் அனைத்தும் கொண்ட நகரங்களை உருவாக்கினால் தான் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற பிற IT நகரங்களுடன் போட்டியிட முடியும் என்றார்.

அதை தெளிவாக உணர்ந்து  தான் அரசு இந்த திட்டங்களை அறிவித்தது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கான முயற்சிகளை படிப்படியாக எடுத்துக்கொண்டே இருக்கின்றனர். அதை இன்னும் வேகப்படுத்தலாம். இவ்வாறு அமைச்சர் கூறினார். 

எதிர்பார்க்கலாம் விரைவில் வருமென்று!

கோவையின் ஐ.டி. துறை வளர்ச்சிக்கு இந்த திட்டம் மேலும் உதவிடும் என்று கருதப்படும் அதேசமயம் இதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் வனப்பகுதிக்கும், யானைகள் வழக்கமாக பயன்படுத்தும் இடத்திற்கும் அருகில் உள்ளதால் வனவுயிர் ஆர்வலர்களிடமிருந்து இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவே தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.