தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் ? - உச்சநீதிமன்றம் அறிய காத்திருக்கிறது!
- by David
- Nov 20,2023
Update at 2:50 p.m. : பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தவிர மீதம் உள்ள அரசு பதவி நியமன கோப்புகளுக்கும் அனுமதி தந்துள்ளார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசு தரப்பில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் மசோதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் (எம்.எல்.ஏ.கள்) ஒப்புதல் பெற்று, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் போது அதற்கு அவர் ஒப்புதல் வழங்க கால தாமதம் செய்வதும், அந்த மசோதாக்களை கிடப்பில் போடுவதும் போன்ற போக்கு நடைபெற்று வருகிறது.
இதற்கு தீர்வு காணும் விதத்தில் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால வரம்ப் நிர்ணயம் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதற்கு முன்னரே இந்த வழக்கு உச்சநீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து ஆளுநர் தரப்பு பதிலளிக்க உத்தரவும் பிறப்பிக்க பட்டிருந்தது.
இந்நிலையில் , தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகி, தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாக்களை எந்த காரணமுமின்றி ஆளுநர் நிராகரித்துவருகிறார் என்ற வாதத்தை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, “உச்சநீதிமன்றம் நவ.10ஆம் தேதி ஆளுநர் தரப்பு பதிலளிக்க பிறப்பித்த பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் எங்கு உள்ளது? 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்?” என்று தொடர் கேள்விகளை எழுப்பினார்.
இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அத்துடன் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்றும், ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய காத்திருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.