கோவை-சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு கூடுதல் பெட்டிகள் கிடைக்குமா? அதிகாரிகள் தகவல்!
- by David
- Apr 26,2023
8 பெட்டிகள் மட்டுமே கொண்ட கோவை-சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு தொடர்ந்து நல்ல ஆதரவு பயணிகளிடம் இருந்து கிடைத்து வருவதால் ரயில் பெட்டியின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கோவை-சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் அமைக்கப்படுவது குறித்து ரயில்வே அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:-
"இதுவரை சென்னை கோவை வந்தே பாரத் ரயிலுக்கு சூப்பர் வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் 14,000க்கும் மேற்பட்டோர் இந்த வழித்தடத்தில் பயணித்துள்ளனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்ற போதிலும், உடனடியாக கூடுதல் பெட்டிகளை இணைக்க முடியாது."
"ரயில்வே விதிப்படி, ஒரு வழித்தடத்தில் தொடர்ந்து ஆறு மாதங்களில் ரயில்கள் இயக்கப்பட்ட பிறகே அடுத்த கட்ட முடிவு எடுக்க முடியும். தேவை அதிகமாக இருந்தால் அதன் பின்னரே கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்."
இவ்வாறு அவர்கள் கூறினர்.