கோவை, மதுரையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் குப்பைகளை மின்சாரமாக்கும் திட்டம் வருகிறது - உறுதி செய்தார் அமைச்சர் நேரு
- by David
- Aug 24,2025
இன்று கோவை வந்த தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, கோவை நகரில் நடைபெறும் அத்துறை சார்ந்த பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
கோவை செம்மொழிப் பூங்கா திட்ட பணிகள், ஆர்.எஸ்.புரம் ஹாக்கி ஸ்டேடியம் திட்ட பணிகள், கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் புது கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் குப்பை மாற்று நிலையம், குறிச்சி குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்யவும், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாதிரி பள்ளியில் ரூ. 2.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புது மாணவர்கள் தங்கும் விடுதி மற்றும் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புது வகுப்பறைகளை திறந்து வைக்கவும், உக்கடம் பேருந்து நிலையத்தை ரூ.21.55 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புதுப்பிக்கும் பனிக்கடிக்கல் நட்டவும், வெள்ளலூர் குப்பை கிடங்கில் ரூ.69.20 கோடி மதிப்பீட்டில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கும் பணியை துவங்கி வைக்கவும் இன்று அமைச்சர் கோவை வந்தார்.
இதற்கு நடுவே செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது, கோவை செம்மொழிப் பூங்கா திட்டப் பணிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொகை தாண்டி ரூ.50 கோடிக்கு மேல் செலவு செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளதாக கோவை மாநகராட்சி தரப்பில் தன்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இது குறித்து முதலமைச்சர் உடைய அனுமதி பெற்று, நிதி வழங்கி இந்த பணியை முடிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்காக இன்று ஆய்வுகள் நடைபெற்றதாக கூறினார்.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் சேரும் கழிவுகளால் நிலத்தடி நீரும் மாசடைவது பற்றி அவரிடம் கேட்டபோது, குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் இன்று சுமார் ரூ.70 கோடி செலவில் பயோ மைனிங் செய்து அதை சுத்தப்படுத்தும் பணிகளை இன்று துவங்குகிறோம் என்று கூறினார்.
கோவையில் ' வேஸ்ட் டு எனர்ஜி' என்கின்ற திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி மதிப்பில் பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து அதை மின்சாரமாக மற்றும் திட்டத்தை மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம் எனவும் மீதமுள்ள மக்கும் குப்பைகளை உரமாக்கி கொடுக்கக் கூடிய திட்டத்தையும் கோவை மற்றும் மதுரையில் ஆரம்பிக்க உள்ளோம் என்று கூறினார்.
கோவை மாவட்டத்தில் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் வரி அளவு உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகளிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாளிதழ்களில் செய்திகள் வருகிறது. இது பற்றி அமைச்சரிடம் கேட்ட போது, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைந்த வரியே தமிழகத்தில் பெறப்படுகிறது என்று கூறினார். குப்பை வரியோ மற்றும் இதர வரிகளோ ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை தாண்டி அதிகமாக இருக்க வாய்பில்லை என்றார்.