கோவை மாவட்ட பகுதிகளான கோவில்பாளையம், செட்டிப்பாளையம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் தங்குமிடங்களில் போலீசார் இன்று காலை சோதனை மேற்கொண்டனர்.

 

மாணவர்கள் அறையெடுத்து தங்கும் பகுதிகளில் மாணவர்கள் தான் தங்குகிறார்களா அல்லது மாணவர்கள் எனும் போர்வையில் வேறு யாரும் உள்ளனாரா? போதை பொருள் பயன்பாடு உள்ளதா என்ற கோணத்தில் இதுபோன்ற திடீர் சோதனைகள் நடைபெறும்.

 

அப்டேட் : இன்று நடைபெற்ற சோதனை மேல் குறிப்பிட்ட அதே கோணத்தில் தான் நடந்துள்ளது.

 

சோதனை நடத்தப்பட்ட சில மாணவர்கள் தங்கியிருந்த விடுதி/அறைகளில் கஞ்சா, குட்கா மற்றும் தடைசெய்யப்பட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது.

 

இதை அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விசாரணையில் ஏராளமான ஆயுதங்களும் மாணவர்களின் அறைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் IPS, இந்த சோதனையில் 13 பேரை பிடித்துள்ளதாகவும் சந்தேகப்படும் நபர்கள் 55 பேரையும் பிடித்துள்ளதாகவும் 6.3 கிலோ கஞ்சா 52 கிலோ குட்கா, 8 ஆயுதங்கள், போலியான பதிவு எண், முறையான ஆவணங்கள், பதிவு எண் இல்லாத,46 இருசக்கர வாகனங்கள், மற்றும் 1 காரை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார். 

 

குற்ற பின்னணி உள்ளவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கோவையில் அடைக்கலம் புகுவதாகவும் இந்த பகுதிகளில் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலும் இந்த சோதனைகள் நடைபெற்றதாக தெரிவித்தார். தற்பொழுது பிடிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, கொள்ளை வழக்கு ஆகியவை இருப்பதாகவும் இந்த வழக்கில் சூடான் நாட்டை சார்ந்தவரும் இருப்பதாக தெரிவித்தார். 

 

விசாரணை முடிந்த பிறகு தான் போதை பொருட்கள் எங்கிருந்து வந்தது இதில் யார் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என்பது பற்றி தெரியவரும் என்றும் மேற்கொண்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

 

இதில் கல்லூரியில் இருந்து இடை நிற்றல் செய்த மாணவர்களும் இருப்பதாக தெரிவித்த அவர் இது போன்று வழி தவறி செல்பவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி மீண்டும் படிப்பை தொடர்வது போன்றவற்றிற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். 

 

கோவையை பொறுத்தவரை செட்டிபாளையம், மதுக்கரை, சூலூர், நீலாம்பூர், க.க.சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தான் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பதாக கூறினார்.