உழவர் சந்தையில் வெளி கடைகளை விட பல பொருட்களின் விலை அதிகம், அதிகாரிகள் தலையீடு தேவை! - சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்!
- by David
- Sep 24,2022
விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நஷ்டம் அனுபவிக்காமல் நியாயமான விலைக்கு விற்கவும், நுகர்வோர் தரமான காய்கறிகளை நேரடியாக விவசாயிகளிடம் வெளி சந்தைகளை விட சிறிதளவு குறைந்த விலையில் பெறவும் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட உழவர் சந்தையில் சில பொருட்களின் விலை வெளியே உள்ள கடைகளை விட அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் கடந்த 40 ஆண்டுகளாக நுகர்வோரின் நலனுக்காக செயல்பட்டு வரும் சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பு இந்த தகவலை பத்திரிகை செய்தி மூலம் தெரிவித்தது.
வெளி மார்க்கெட்டில் சில்லறை விற்பனையில் கொத்தமல்லி இலை ஒரு கிலோ ரூ. 95 என்று இருக்க கொத்த மல்லி ஒரு கிலோவை உழவர் சந்தையில் ரூ.95 விட குறைவாக விற்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை என்பதை சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பு ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் 18/9/22 அன்று கொத்தமல்லி இலை விலை ஒரு கிலோ ரூ.120. இது சந்தையில் உள்ள வேளாண் வணிகத்துறையின் விலைப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு கொத்தமல்லி என்று கூறி கிலோ ரூ.140 என்று சந்தையில் உள்ள போர்டில் கூடுதலாக எழுதப்பட்டுள்ளது.
ஆனால் அனுமதிக்கப்பட்ட ரூ. 120, ரூ.140 ஆகிய விலைகளில் கொத்தமல்லி இலையை விற்காமல் அதற்கும் மேல் விற்கப்படுகிறது. சிலவற்றை இடைத்தரகர்கள் அதிக விலைக்கு விற்கிறார்கள், என்று சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று (24/9/22) வெளி கடைகளில் ஒரு கிலோ உருளை கிழங்கு ரூ. 32, காலிஃபிளவர் ரூ. 50, கேரட் ரூ.95, பீன்ஸ் ரூ.70, முட்டைகோஸ் ரூ.20, பச்சைமிளகாய் ரூ.44 என்று இருக்க ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் ஒரு கிலோ உருளை கிழங்கு ரூ. 38, காலிஃபிளவர் ரூ. 54, கேரட் ரூ. 98, பீன்ஸ் ரூ.78, முட்டைகோஸ் ரூ.24 மற்றும் பச்சைமிளகாய் ரூ. 48 என்று விற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
வெளி சந்தையை விட உழவர் சந்தையில் விலை 20% குறைவாக இருக்க வேண்டும் என்று இருக்க, நடைமுறையில் அப்படி இருப்பதில்லை. எனவே இவ்வாறு நடைபெறுவதை துறைசார்ந்த விவசாய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த அமைப்பு பத்திரிகை மற்றும் ஊடங்கங்கள் வழியாக கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இது குறித்து சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சர் இருவரிடமும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைந்த்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் அதே சமயம் பொது மக்களுக்கும் தரமான காய்கறிகள் கிடைக்கும், எனவே இதை அரசு அதிகாரிகள் விரைந்து செய்ய வேண்டும்.