கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டு 18 மாதங்களாகி இருக்கும் நிலையில், இது குறித்து ஒரு நபர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். 

 

போக்குவரத்து துறை ஆர்வலரான தயானந்த கிருஷ்ணன் எனும் நபர் மத்திய அரசாங்கத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செப்டம்பர் 1 அன்று கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். 

 

அவருக்கு செப்டம்பர் 24ஆம் தேதி மத்திய அரசாங்கத்திலிருந்து பதில் கிடைத்திருக்கிறது. அதில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அதிக அளவிலான ஆய்வுகள் பல்வேறு கட்ட அரசுத்துறை இடம் இருந்து நடைபெற வேண்டி உள்ளது எனவும், ஒப்புதல் வழங்குதல் என்பது திட்டத்திற்கான சாத்தியக்கூறு மற்றும் நிதி வசதிகள் ஏற்ப இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

 

தற்போது கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

 

இந்த நேரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற பல்வேறு பதில்கள் மூலம் தயானந்த் இந்தியாவில் உள்ள வேறு சில மாநிலங்களில் மெட்ரோவுக்கு எவ்வளவு வேகமாக ஒப்புதல்கள் வழங்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டி உள்ளார். 

உத்திர பிரதேச மாநிலத்தில் கான்பூர் மற்றும் ஆக்ராவில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்க ஐந்தே மாத காலத்தில் மத்திய அரசாங்கத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துள்ளது எனவும், குஜராத் மாநிலத்தில் மெட்ரோ திட்டங்கள் நடைபெற ஒப்புதல் கேட்ட போது அங்கே சுமார் 6-8 மாதங்களில் ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் ஆர்டிஐ மூலம் அவர் விவரங்களை பெற்றுள்ளார். 

ஆனால் தமிழ்நாடு என்று வரும்பொழுது மட்டும் இந்த தாமதம் ஏற்படுகிறது என அந்த நபர் கருத்தை தெரிவித்துள்ளார். பிற மாநிலங்களுக்கு எப்படி அனுமதி வழங்கப்படுகிறதோ அதுபோல தமிழகத்திற்கும் காலராமதம் இன்றி ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.