தமிழக அரசு சார்பில் கடந்த வியாழன் அன்று “கல்வியில் சிறந்த

தமிழ்நாடு” எனும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்கள், சாதனைகளை முன்னிலைப்படுத்தி 7 பகுதிகளாக நடைபெறும் இவ்விழாவில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 

 

கல்வித்துறை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது திரைத்துறை சார்ந்த பலரும் இதில் கலந்துகொண்டனர். 

 

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த நிகழ்ச்சி குறித்த அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. 

 

அதற்கு அவர், அது டிராமா அரசாங்கத்தின் இன்னொரு நடவடிக்கை என்று விமர்சனம் செய்தார்.

 

இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளில்லை. ஆசிரியர் பற்றாக்குறை, வேலையாட்கள் பற்றாக்குறை, வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் பாடம் நடத்துவது, ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், ஜாதி ரீதியான மோதல்கள் இதையும் அவர்கள் சாதனையாக சேர்த்துக் கொள்வார்களா என கேள்வி எழுப்பினார். 

 

துறைக்கு சம்பந்தமே இல்லாத சினிமாக்காரர்களை வைத்து விளம்பரத்திற்காக இந்த நாடகத்தை நடத்தி உள்ளனர் என்று விமர்சித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர் இந்திய துணை குடியரசுத் தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் அக்டோபர் 5ம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார் எனவும் 4ம் தேதி சென்னைக்கு வர உள்ளதாகவும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்ய உள்ளதாக கூறினார்.

 

கோவை பூ மார்க்கெட் பகுதியில் இளம்பெண்ணின் ஆடை விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் உடை என்பது தனிப்பட்டது தான் என்றும் அதே சமயம் அவர்கள் அது போன்று நடந்து கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது எனவும் பூ வாங்க வந்த பெண்களிடம் உடையை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என கூறினார். அதே சமயம் பொதுவெளி என்று வரும் போது ஆடைக்கு என்று கண்ணியம் உள்ளது என கூறினார்.