சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுகள் சம்மேளம் சார்பில், உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்-2025ஜெர்மனி நாட்டில் உள்ள ரைன் ரூர், பெர்லின் உள்ளிட்ட நகரங்களில் ஜூலை 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் 113 நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. சுமார் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இப்போட்டியில் இந்திய பேட்மிண்டன் அணி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் சதீஷ்குமார் கருணாகரன் தலைமையில் பங்கேற்று விளையாடியது.

அதன்படி, 19ம் தேதி நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மலேசிய அணியை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அதைத்தொடர்ந்து 20-ம் தேதி நடைபெற்ற சீனா-தைபை அணிக்கு எதிரான அரையிறுதிச் சுற்றில் 3-1 என்ற செட் கணக்கில் இந்திய அணி வெற்றியைத் தவற விட்டது. இதன்மூலம் இந்திய பல்கலைக்கழகப் பேட்மிண்டன் அணி, வெண்கலப்பதக்கம் வென்றது.

உலக பல்கலைக்கழக பேட்மிண்டன் போட்டியில், இந்திய பேட்மிண்டன் அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது இதுவே முதல்முறையாகும். இதே போட்டியில் 6 பேர் கொண்ட மகளிர் அணியில் இக்கல்லூரி மாணவி வர்ஷினி பங்கேற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய பேட்மிண்டன் அணியில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்ற மாணவர்களை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார், பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறைப் பேராசிரியர் ஆர்.அண்ணாதுரை ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.