கோவையில் தேர்தல் நோக்கத்துடன் பணிகளை செய்யாமல் மக்கள் நலனுக்காக வேலைகளை செய்யுங்க - அரசுக்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோரிக்கை!
- by David
- Apr 14,2025
கோவையில் பல கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இந்த பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பணிகளை தேர்தல் நோக்கத்துடன் முன்னெடுக்காமல் மக்கள் நலனை முன்வைத்து வேகப்படுத்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
அம்பேத்கரின் 134 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை வடகோவையில் அமைந்துள்ள மத்திய உணவுக் கிடங்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது :-
சட்டப்பேரவையில் கோவையின் தேவைகளை முன்வைத்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பேசிவருகிறேன். அதற்கு பதிலளிக்கும் வகையில் அரசு தரப்பில் கோவைக்கு நிறைய நலத்திட்டங்கள் வழங்கியுள்ளதாக அமைச்சர்கள் பலரும் நீண்ட பட்டியலை வாசிக்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் சாலைப்பணிகளுக்காக ரூ.200 கோடி கொடுத்துளோம் என்கின்றனர். ஆனால் செய்தியாளர்களுக்கே தெரியும் 2 சக்கர வாகனங்களில் செல்லும்போது கோவையில் சாலைகள் எப்படி உள்ளது என்று.
கோவையில் சாலை பணிகள் உடனே ஆரம்பிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நோக்கத்துடன் இந்த பணிகளை செய்யாமல் மக்கள் நலனுக்காக அரசு வேலை செய்யவேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.
கோவையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு என்னவெல்லாம் மத்திய, மாநில அரசுகள் மூலமாக ஆக்கபூர்வமாக கொண்டுவர முடியுமா, ஒரு சட்டமன்ற உறுப்பினராக தான் அதை தொடர்ந்து செய்துவருவதாக அவர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் நடைபெறும் போது, பிற கட்சி தலைவர்கள் பேசுவது நேரலையில் வருகிறது ஆனால் தான் கேள்வி எழுப்பும்போது இணைப்பு துண்டிக்கப்படுகிறது எனும் குற்றச்சாட்டை பேரவை தலைவர் முன்பு வைத்துள்ளதாக வானதி கூறினார்.
குறிப்பாக கோவை தெற்கு தொகுதிக்காக தான் பேசிய காட்சிகளை வழங்கவேண்டும் என அரசிடம் வானதி கேட்டதற்கு, அந்த காட்சிகள் இப்போது வரை முழுமையாக வழங்கப்படவில்லை என்றார். அந்த காட்சிகளில் தான் பேசும் எதுவும் இடம்பெறாமல், அமைச்சர்கள் பேசுவதை மட்டும் காட்டுகின்றனர் என குற்றம்சாட்டினார்.
இவ்வாறு அந்த காணொளி காட்சிகளை திருத்தும் "அந்த எடிட்டருக்கு ஆஸ்கார் அவார்ட் தான் கொடுக்கணும். எப்படி எடிட் பன்னிருக்காரு..." இதை நான் மட்டும் சொல்லவில்லை, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் (எடப்பாடி பழனிச்சாமி) அவர்களும் இதை தான் சொல்கிறார் என வானதி பேசினார்.
தொடர்ந்து அவரிடம் அதிமுக - பாஜக கூட்டணி பற்றி, புது மாநில தலைவர் பற்றி அரசியல் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு, கூட்டணி சிறப்பாக செயல்படும், ஏனென்றால் 2 கட்சிகளின் இலக்கு திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றே. எனவே நிச்சயம் நல்லபடியாக இந்த கூட்டணி முன்னேறி செல்லும் என்றார்.
புது தலைவர் நயினார் நாகேந்திரன் பணி சிறப்பதற்கும், ஒத்துழைப்பு தருவதற்கும், அவருடன் இனைந்து பணியாற்றவும் கோடிக்கணக்கான தொண்டர்கள் காத்துக்கொண்டுள்ளனர். நல்ல முறையில் அவர் கட்சியை வழிநடத்துவார் என்ற நம்பிக்கை எங்கள் அனைவர்க்கும் உள்ளது. மிக சிறப்பாக அவரின் பணி நடைபெறும் என்றார்.