கோவையில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி  (சி.ஆர்.பி.எப். கல்லூரி) துடியலூர் அருகே உள்ள ராக்கிபாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

சி.ஆர்.பி.எப்.ல் 97வது சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிவின் கீழ் தேர்வாகியுள்ள 366 பேருக்கு (12 பெண்கள் சேர்த்து) 48 வாரம் உடற்பயிற்சிகள், நவீன உபகரணங்களை கையாளும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சி முடித்த வீரர்கள் ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், வடகிழக்கு பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்படவுள்ளனர்.

இதன் நிறைவு நாளில் பயிற்சி நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்புரையாற்றிய சி.ஆர்.பி.எப்.பயிற்சிக் கல்லூரியின் தலைவர் ஐ.ஜி. லாங்சின்குப், " நம் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையில் சி.ஆர்.பி.எப் முக்கிய பங்கு வகித்து வருகிறது. உங்களுடைய கடின உழைப்பு மற்றும் சிறந்த செயல்திறன்களை கொண்டு உங்கள் சேவையில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களில் வெற்றிபெறவேண்டும் என்று கூறி அவர்களை வாழ்த்தினார்.