மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்... மீண்டும் கோவை அவிநாசி சாலை ஜொலி ஜொலிக்கும்
- by David
- Jul 25,2025
கோவை மாநகர் அவிநாசி சாலையில் ரூ.1,791.23 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 10.1 கிலோமீட்டர் நீள மேம்பால பணிகள் விரைவில் நிறைவு அடைய உள்ளது என்பதால் வாகன ஓட்டிகள் பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.
பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு இந்த பணிகள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நிறைவடையும் என சமீபத்தில் கோவை வந்த போது கூறினார்.
இந்த சாலை பணிகள் 4 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய போது அவிநாசி சாலை வழியே இருந்த மின்விளக்குகள் அகற்றப்பட்டன. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். இதை அடுத்து தூண்கள் வழியே தற்காலிக விளக்குகள் பொருத்தப்பட்டன.
தற்போது பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், மேம்பாலத்தின் கீழே உள்ள அவிநாசி சாலையின் மையப்பகுதிகளில் உருவாக்கப்பட்டு உள்ள நிரந்தர மையத்தடுப்பு பகுதிகள் மின்விளக்கு கம்பங்கள் பொருத்தும் பணிகள் துவங்கி உள்ளன.
இதற்காக மின் கம்பங்கள் மையப் பகுதிக்கு படிப்படியாக எடுத்துவரப்பட்டு, அங்கு பொருத்தப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் 10.1 கிலோமீட்டர் நீளத்துக்கு நடைபெற்ற பின்னர், மீண்டும் அவிநாசி சாலை இரவு நேரத்திலும் முன்பு போலவே பிரகாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
படங்கள் : ராஜன்