கோவை உணவக உணவில் பல்லி இருந்ததாக கிளம்பிய குற்றசாட்டு ... விசாரணையில் வெளிவந்த உண்மை
- by CC Web Desk
- Jul 31,2025
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கும் ஒரு உணவகமான "கோவை பிரியாணி ஹோட்டல்" லில் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் வந்து பிரியாணி ஆர்டர் செய்து அங்கு உட்கொண்ட போது பிரியாணிக்கு வழங்கப்பட்ட குழம்பில் பல்லி இருந்ததாக கடந்த 27.5.2025 அன்று அவர் தரப்பில் குற்றச்ச்சாட்டு எழுந்தது. இது கோவையில் அன்று பெரும் பரபரப்பான செய்தியானது.
மேலும் குழம்பில் பல்லி இருந்தது வீடியோ காட்சிகளுடன் செய்திகளில் வெளியானது. இதையடுத்து அதே நாளில் அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும், உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இதையடுத்து உணவகத்தின் உரிமையாளா் மற்றும் மேலாளா் ஆகியோா் 2-3 நாட்களுக்கு பின்னதாக கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் ஒன்றை அளித்தனா். அதில் அவர்கள், உணவகத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாங்கள் பார்த்தபோது அந்த குழம்பில் செயற்கையாக பல்லி போடப்பட்டது எனவும் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் உள்பட 4 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், இந்த ஓட்டல் உரிமையாளர் உமாபதி, நடராஜன் என்பவருடன் இணைந்து படித்தவர் எனவும், முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சி நடத்துவதில் நடராஜனுக்கு உமாபதி மேல் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் தன்னுடன் 4 பேரை சேர்த்து உமாபதியின் பேருக்கு அவப்பெயர் ஏற்படுத்த இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது.
இந்த வழக்கில் நடராஜன் நிபந்தனையுடன் ஜாமீன் பெற்றுள்ளார். பவானியை சேர்ந்த அண்ணாதுரை (37), சரவணன் (39) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.