வைரஸ் காய்ச்சல், மழைக்கால காய்ச்சலை தவிர்க்க இதையெல்லாம் செய்யுங்க - மருத்துவர் அறிவுரை
- by David
- Jul 24,2025
மழை மற்றும் குளிர் சேர்ந்து வரும் காலமாக தற்போது உள்ளதால், இந்த காலத்தில் காய்ச்சல் பாதிப்பு பலருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
வீட்டின் பின்புறம், முகப்பு பகுதி என ஆங்காங்கே மழை நீர் தேங்க வழிவகுக்கும்படி ஏதேனும் பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்தாலோ, குப்பைகள் சேர்த்து வைக்கப்பட்டிருந்தாலோ, கொசுக்கள் உற்பத்தியாக சாதமானாக சூழலாக அவை இருக்கும் எனவே இதையெல்லாம் கவனிக்கவேண்டும்.
ஏன் ஏதாவது அச்சமூட்டும் சம்பவங்கள் நடந்துள்ளதா? என்றால் அப்படி எதுவும் இல்லை, ஆனால் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது தான் என்கின்றனர் மருத்துவர்கள்.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள வெளி நோயாளிகள் பிரிவுக்கு தினமும் 1500 வருகை தருகின்றனர் என்றால் அதில் 100 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருகின்றனர். சிலர் டெங்கு, ஃப்ளூ காய்ச்சல், வைரஸ் காய்ச்சலுடன் வருகின்றனர்.
இம்மாதத்தில் 2-3 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டும் சிகிச்சை பெற்றுள்ளனர் என பொள்ளாச்சியில் இயங்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறியுள்ளார்.
டெங்கு கொசு கடி மூலம் பரவக்கூடியது. எனவே கொசு கடி தொல்லை ஏற்படாமல் இருக்க வீட்டின் உள்புறம், வெளிப்புறம் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும், குப்பைகள் நாள்-கணக்காக சேராத படி பார்த்து கொள்ள வேண்டும், ஜன்னல்களில் கொசு வலை பொருத்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.குடிநீரை காய்ச்சி குடிக்காமல் இருந்தால் டைபாய்டு, வயிற்றுப்போக்கு வர வாய்ப்புள்ளது எனவே தண்ணீரை காய்ச்சி அதன் பின்னர் குடிக்கவேண்டும்.
காய்ச்சல் ஏற்பட்டால் மருதகத்தில் தானாகவே மருந்து வாங்கிக்கொள்ளும் பழக்கம் கூடாது. காய்ச்சல் அதிகம் இருந்தாலும், உடல் சோர்வு, மயக்கம், உணவு உண்ணுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
அப்படியே காய்ச்சலை தொடரவிட்டால், உடலில் நீர்சத்து குறைய வாய்ப்புள்ளது. இதனால் எதிர்பாரா பாதிப்பு ஏற்படலாம் என்கிறார் டாக்டர் ராஜா. எனவே ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி, இது என்ன காய்ச்சல் என்பதை அறிந்து, அதற்காக மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை எடுத்துக்கொள்வது தான் சரியானது.
கோவையில் மலேரியா காய்ச்சல் சூழல் இல்லையென்றாலும் கூட, மலேரியா உள்ள பிற மாநிலங்களின் பகுதிகளுக்கு சென்று வரக்கூடிய நபர்கள் 2-3 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது தெரியவந்ததாக கூறிய அவர், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது பற்றி சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர் என்றார்.
வழக்கமாக வரக்கூடிய அளவு டெங்கு, மலேரியா காய்ச்சல் பொள்ளாச்சியில் இல்லை என்றாலும், வரும் காப்போம் என்ற நோக்குடன் செயல்படுவது அவசியம் என அவர் கூறினார்.