கோவை மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் I, பில்லூர் II, பில்லூர் III, ஆழியார் மற்றும் பவானி (கவுண்டம்பாளையம், வடவள்ளி) குடிநீர் திட்டங்களின் மூலமாக  தங்குதடையின்றி சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையினை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் அணையின் திரமட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். 

மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் உடன் சென்றனர். இதன் பின்னர், பில்லூர் அணையின் அருகில் அமைந்துள்ள குந்தா நீர் மின் நிலையத்தினையும் அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, நீர் மின் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுகளின் போது, யங் இந்தியன்ஸ் எனும் இளைஞர் அமைப்பின் சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மூலம் தேர்வு செய்யப்பட்ட 11 மாணவ, மாணவியர்களுக்கு குடிநீர் திட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.