கோவை மாநகர் திருச்சி சாலையில் அமைந்துள்ள பிரபல வி.ஜி.எம். மருத்துவமனைக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாதசாரிகள் சாலையின் மறுபக்கம் பாதுகாப்பாக கடக்க மக்களே இயக்கக்கூடிய பெலிகன் சிக்னல் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

ஆனால் இது இன்னும் இயக்கக்கூடிய நிலைக்கு கொண்டுவர படவில்லை. அந்த வழியே பெலிகன் சிக்னல் இருப்பதை கண்டு அதை பயன்படுத்தி சாலையை கடக்கலாம் என சிலர் நினைத்து பட்டன்கள் அழுத்தினால் அவை செயல்படவதில்லை. தூசி படிந்து போய் உள்ளது.

மேலும் பேருந்து நிலையத்தில் இருந்து சாலையை தடையின்றி கடக்க முடியாதபடி நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

இதே இடத்தில் இருந்து ஒரு 10 அடியில் யு டர்ன் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது பயன்பாட்டில் உள்ளது.  பேருந்து நிறுத்தத்திற்கு சற்று தொலைவில் யு டர்ன் வசதி செய்யப்பட்டிருப்பதால், அங்கு திரும்பவேண்டிய வாகனங்களை தவிர பிற வாகனங்கள் அதிக அளவில், வேகமாக வருகின்றன.

இதனால் சாலையை கட்டுபவர்களுக்கு இந்த இடம் சவாலாக அமைகிறது. சாலையை கடப்பவர்களுக்கு பயன்படும் வகையில் இங்குள்ள பெலிகன் சிக்னல் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? அல்லது இங்கு பெலிகன் சிக்னல் தேவையில்லை என அதிகாரிகள் கருதினால், தேவைப்படும் இடத்திற்காவது அது வேகமாக மாற்றப்படுமா?

தேவை உள்ளது என்றால் வேகமாக அதை செயல்பாட்டுக்கு கொண்டுவாருங்கள். விபத்தில்லா கோவைக்கு பெலிகன் சிக்னல் போன்ற கட்டமைப்புகளும், அது பற்றிய விழிப்புணர்வும் அவசியம்.