கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்தும், 'அல்மா பிரனர்ஸ்-2025' என்ற 5 நாள் மாணவ தொழில்முனைவோர் மாநாடு 5.0, கல்லூரி கலையரங்கில் இன்று (30.07.2025) தொடங்கியது.

இதன் தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்து, மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.

பின்னர் சிறப்பு விருந்தினர்களும், முன்னாள் மாணவர்களுமான பெங்களூரு 4எஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி. சந்திரமோகன், குட்லைஃப்டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சி. மோகன் குமார் ஆகியோருக்கு “வளர்ந்து வரும் முன்னாள் மாணவர் தொழில்முனைவோர்” என்ற விருதுகளை வழங்கி பாராட்டினார்.

அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் பேசும் போது, படிக்கும் போதே மாணவர்கள் தொழில்முனைவு திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி? , எவ்வாறு தொழில்முனைவோர்களாக உருவாகுவது? முன்னாள் மாணவர் தொழில்முனைவோரின் வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் பெறுவது எப்படி? என்பது பற்றி விளக்கிப் பேசினர்.

இதன் தொடர்ச்சியாக ஆகஸ்டு 3-ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்களான மகாலட்சுமி மில்ஸ் நிர்வாக இயக்குநர் விஜய் வி. பட்டேல், இன்டல்லிஸ்வ் டெக்னாலஜீஸ் நிறுவன செயல்இயக்குநர் கே. சுஹாலே, சுரபி புல்லியன் நிர்வாக இயக்குநர் கே. வாசுதேவன், ஜூட்பேக்ஸ் உரிமையாளர் சி. சில்வியா ரோஸ்லின், திபால்ம்ஸ் ரிடர்ன் கிப்ட்ஸ் உரிமையாளர் ரேணுகா சுமன், டி.எம்.சிஸ். கிப்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ் உரிமையாளர் ஆனந்தி ஸ்ரீகாந்த், சிந்தியா பிளாஸ்டிக்ஸ் தலைமை செயல் அலுவலர் எம். சுரேஷ்சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.